1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (16:26 IST)

டிரம்ப் பதவியை பறிக்க வாய்ப்பு? துணை அதிபருக்கு கோரிக்கை

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்து மீறி நுழைந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவரை பதவி நீக்கும் சாத்தியம் குறித்த முனுமுனுப்பு எழுந்துள்ளது.

இன்னும் 13 நாள்கள் மட்டுமே அவரது பதவிக்காலம் உள்ள நிலையில் இந்த முனுமுனுப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை டிரம்ப் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரம் ஏதுமில்லாமல் அவர் தொடர்ந்து பேசிவருகிறார்.
 
தேர்தல் சபை வாக்குகள் எண்ணும் பணி நடந்தபோது
 
ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க நாடாளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த  தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், டிரம்ப்தான் வெற்றி பெற்றார் என்றும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர் கும்பல் நாடாளுமன்றக் கட்டடமான, கேபிட்டல்  கட்டடத்தில் நுழைந்து அமளியில் ஈடுபட்டது.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறையில் மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில்  தேர்தல் சபை உறுப்பினர்களைத்தான் அவர்கள் தேர்வு செய்கின்றனர். அந்த தேர்தல் சபை உறுப்பினர்கள் பிறகு கூடி அதிபரைத் தேர்வு செய்கின்றனர்.
 
இப்படி டிசம்பர் 14ம் தேதி தேர்தல் சபை உறுப்பினர்கள் வாக்களித்து, சீலிட்டு கவர்களில் அதை அனுப்பி வைத்தனர். அந்த வாக்குகளை அமெரிக்க  நாடாளுமன்றத்தில் எண்ணிக் கொண்டிருந்தபோதுதான் இப்படி ஒரு வன்முறை அந்தக் கட்டடத்தில் நடந்தது.
 
அரசமைப்புச் சட்டத்தின் 25வது திருத்தம்
 
இந்த வன்முறையில் 4 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசி வந்ததால்தான் கலவரம் ஏற்பட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
 
எனவே டிரம்பை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன.
 
அந்த சட்டப் பிரிவுக்கு 25வது திருத்தம் என்று பெயர்.
 
டிரம்பின் அமைச்சரவைக்குள்ளேயே இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து முனுமுனுப்புகள் தொடங்கியுள்ளன என்று பிபிசியின் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25-வது திருத்தத்தின் படி, அதிபருக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.
 
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப் அணுகுமுறைக்கு சொந்தக் கட்சியில் பெருகும் எதிர்ப்பு
 
ஜோ பைடன் வெற்றி மீதான ஆட்சேபனைகளை நிராகரித்த துணை அதிபர்: செனட்டில் கை தட்டி ஆரவாரம் தற்போதைய நிலையில், முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள், துணை அதிபர் மைக் பென்ஸ், ஆகியோர், 'டிரம்ப் தகுதியோடு இல்லை என்பதால் மைக் பென்ஸ் செயல் தலைவர் ஆகிறார் என்று நாடாளுமன்றத் தலைவர்களுக்கு கடிதம் எழுதிதான் இதைச் செய்ய வேண்டும்.
 
1967ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை.
 
ஆனால், இதுவரை இதற்கான கோரிக்கை துணை அதிபர் மைக் பென்சிடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்படவில்லை.
 
வெர்மான்ட் மாகான குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், என்.ஏ.ஏ.சி.பி. (நேஷனல் அசோசியேஷன் ஃபார் அட்வான்ஸ்மென்ட் ஆஃப் கலர்ட் பீப்புள்) தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து இந்தப் பிரிவை பயன்படுத்தும்படி கோரியுள்ளனர்.
 
"டிரம்ப்தான் கும்பலைக் கூட்டினார், பேசினார், தூண்டிவிட்டார்"
 
புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த சம்பவத்துக்கு டிரம்ப்தான் பொறுப்பு என்று வட கரோலினா மாநில செனட்டர் ரிச்சர்ட் பர்  குற்றம்சாட்டியுள்ளார்.
 
அவர் அதிபர் டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்.
 
"ஆதாரமில்லாத சதிக் கோட்பாடுகளை தொடர்ந்து பிரசாரம் செய்து இந்த இடத்துக்கு கொண்டுவந்து விட்டதற்கு அதிபர் டிரம்ப்தான் பொறுப்பு" என்று அவர்  கூறியுள்ளார்.
 
குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லிஸ் செனீ இன்னும் கடுமையாக டிரம்ப் மீது குற்றம்சாட்டினார்.
 
"அதிபர்தான் கும்பலைக் கூட்டினார், அதிபர்தான் கும்பலைத் தூண்டினார், அதிபர்தான் கும்பலிடம் பேசினார், அவர்தான் நெருப்பைப் பற்றவைத்தார் என்பதில் எந்த கேள்வியும் இல்லை" என்று கூறியுள்ளார் லிஸ் செனீ.
 
அதைப் போலவே அவரது சக குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கேத்தி மெக் மோரிஸ் ரோட்ஜர்ஸ் புதன்கிழமை நடந்த நிகழ்வை "சட்ட விரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று வருணித்துள்ளார். அத்துடன் ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொண்டு வாக்களிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"இந்த பைத்தியக்காரத்தனத்தை கண்டித்து முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்" என்றும் அவர் தமது சொந்தக் கட்சியை சேர்ந்த டிரம்பிடம் கோரியுள்ளார்.
 
கோலராடோ மாநில குடியரசுக் கட்சித் தலைமையும் இந்த நாடாளுமன்றத் தாக்குதலை கண்டித்துள்ளது.
 
குடியரசுக் கட்சி தகவல் தொடர்புப் பிரிவு தேசிய இயக்குநர் மிச்சல் ஆஹ்ரன்ஸ் இந்த வன்முறையை 'உள்நாட்டு பயங்கரவாதம்' என்று வருணித்து ட்விட்டரில்  எழுதியுள்ளார்.
 
"நமது சுதந்திரத்துக்கான போரில் நமது சிப்பாய்கள் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி உயிர் விட்டார்கள். ஆதாரமற்ற சதிக் கோட்பாடுகளின் பெயரில் அந்தக் கொடியை பயன்படுத்துவதைப் பார்ப்பது நாட்டுக்கு அவமானம். ஒவ்வொரு நாகரிகமான அமெரிக்கனும் இதைப் பார்த்து எரிச்சல் அடைவார்கள்" என்றும் அவர்  கூறியுள்ளார்.