வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (11:23 IST)

கலவரம்: டிரம்ப் அணுகுமுறைக்கு சொந்தக் கட்சியில் பெருகும் எதிர்ப்பு

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய வன்முறைக்கு முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் டபிள்யூ புஷ் உள்ளிட்ட அக்கட்சியின் பல தலைவர்கள் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்து வருகின்றனர்.
 
கலவரத்தை எதிர்க்கும் ஜார்ஜ் புஷ்
 
ஜார்ஜ் டபுள்யூ புஷ் புதன்கிழமை அரிதாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், "தேர்தல் முடிவுகளை மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் எப்படி எதிர்க்கப்படுகிறது? இது நமது ஜனநாயக குடியரசு கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் சில அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் நமது அமைப்புகள், சட்ட அமலாக்கத்துறைகளுக்கு நாம் காட்டும் அவமரியாதையை பார்த்து நான் மிகவும் திகைக்கிறேன்," என்று கூறியிருக்கிறார்.
 
அமெரிக்க அதிபர் பதவிக்காலத்தின் நிறைவுக்குப் பிறகு பொதுவாக வெள்ளை மாளிகை விவகாரங்களில் அதிகம் பேசாதவராகவே ஜார்ஜ் டபிள்யூ புஷ் காணப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அவரது இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவதைப் பெறுகிறது.
 
"கேபிடல் கட்டடம் மீதான வன்முறைத் தாக்குதல் - மற்றும் அரசியலமைப்பு ரீதியாக அவசியமான நாடாளுமன்ற கூட்டத்தை சீர்குலைப்பது - பொய்கள் மற்றும் தவறான நம்பிக்கைகளால் தூண்டப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டது" என்று புஷ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த முற்றுகை நடவடிக்கை, அமெரிக்காவுக்கும் அதன் மதிப்புக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று புஷ் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவில், சட்டத்தின் ஆட்சியை ஆதரிப்பது ஒவ்வொரு தேசபக்தி மிக்க குடிமகனின் அடிப்படை பொறுப்பு. தேர்தல் முடிவுகளில் ஏமாற்றமடைந்தவர்களுக்கு இதை தெரிவிக்கிறேன். அரசியல் அரசியலை விட முக்கியமானது நமது நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அமைதி மற்றும் பாதுகாப்பான முறையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றட்டும் என்று ஜார்ஜ் டபிள்யூ புஷ் கூறியுள்ளார்.
 
முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் களம் கண்ட மிட் ரோம்னீ செனட் சபையில் பேசுகையில், "வருத்தப்பட்ட வாக்காளர்களுக்கு நாங்கள் மரியாதை காட்ட சிறந்த வழி உண்மையைச் சொல்வதே" என்று கூறினார்.
 
"உண்மை என்னவென்றால், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் டிரம்ப் தோற்றிருக்கிறார். அந்த அனுபவத்தை நானும் பெற்றேன்" என்று குறிப்பிட்ட ரோம்னீ, "இது ஒன்றும் வேடிக்கை இல்லை," என்று கூறினார்.
 
ரோம்னியின் பேச்சுக்கு சற்று முன்னதாக, சக குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜோஷ் ஹவ்லி பேசியதை அவர் மிக உன்னிப்பாக கவனித்த படம் ட்விட்டரில் வைரலாகியது.
 
அரிஸோனா வாக்கு ஆட்சேபனைக்கு ஆதரவாக வாக்களித்த ஆறு செனட்டர்களில் ஹவ்லியும் ஒருவர், அதிபர் தேர்தலின் நேர்மை குறித்து அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருபவர்.
 
ஆதரவு தரும் குடியரசு கட்சி எம்.பி
இதேவேளை, டிரம்பின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் லிண்ட்சே கிரஹாம் பைடனின் வெற்றியை மீண்டும் ஏற்கும் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
"என்னையும் உங்களுடன் சேர்த்து எண்ணுங்கள். நடந்தது போதும்" என்று தெற்கு கரோலைனா செனட்டரான கிரஹாம் கூறினார்.
 
"ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராகவும் துணைத் தலைவராகவும் அவர்கள் வருவார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
என்ன நடந்தது?
அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவையில் ஜனநாய கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை அதிபராக தேர்வு செய்ய சான்றளிக்கும் நடைமுறைக்காக, மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டம் கேப்பிடல் கட்டடத்தில் புதன்கிழமை தொடங்கியது.
 
அந்த நடைமுறைகளை குலைக்கும் வகையில், டிரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கில் திரண்டு சூறையாடினார்கள். அங்கிருந்த காவல்துறையினரால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
 
இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் எம்.பி.க்கள் அறை, அரங்குகள் ஆகியவற்றுக்குள்ளும் அவர்கள் புகுந்து பொருட்களை உடைத்தனர்.
 
இதையடுத்து அமெரிக்க பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சுமார் நான்கு மணி நேரம் வீரர்களுக்கு தேவைப்பட்டது. இந்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு டிரம்பின் ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர்.
 
அமெரிக்காவுக்கு அவமானம்: ஒபாமா
இது தொடர்பாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது அமெரிக்காவிற்கு "பெரும் அவமதிப்பு மற்றும் அவமானத்தின்" தருணம்," என்று கூறியுள்ளார்.
 
"கேபிட்டல் கட்டடத்தில் இன்றைய வன்முறையை வரலாறு சரியாக நினைவில் வைத்துக் கொள்ளும். தற்போதைய அதிபரால் தூண்டப்பட்டுள்ளது இந்த கலவரம். ஒரு சட்டபூர்வ தேர்தல் முடிவை அடிப்படையற்ற வகையில் அவர் பொய் என்று கூறுகிறார். இது நமது தேசத்திற்கு பெரும் அவமானம் மற்றும் அவமானத்தின் தருணம்,"என்று ஒபாமா நீண்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
 
"இப்போது இரண்டு மாதங்களாக, ஒரு அரசியல் கட்சியும் அதனுடன் இணைந்த ஊடக சூழலும் தங்களைப் பின்பற்றுவோருக்கு உண்மையைச் சொல்ல பெரும்பாலும் விரும்பவில்லை - இது ஒன்றும் பலத்த போட்டியாக இருந்த தேர்தல் இல்லை என்பதையும் புதிய அதிபராக தேர்வாகும் ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார் என்பதையும் அவர்கள் சொல்வதில்லை," என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
 
"கற்பனையான அவர்கள் புனைந்த கதைகள் யதார்த்தத்துக்கு மாறானவை. இது பல ஆண்டுகளாக விதைக்கப்பட்ட மனக்கசப்புகளை தூண்டியிருக்கிறது. இப்போது அதன் விளைவுகளை நாம் பார்க்கிறோம். அது ஒரு வன்முறையாக வளர தூண்டப்பட்டிருக்கிறது," என்று ஒபாமா கூறியுள்ளார்.
 
இப்போதே, குடியரசுக் கட்சி தலைவர்களுக்கு இரு தேர்வுகள் உள்ளன. ஒன்று அவர்கள் இதே பாணியில் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அதிகரிக்கச் செய்யலாம் அல்லது யதார்த்தத்தை உணர்ந்து, எரியும் நெருப்பை அணைக்க முயலலாம். அமெரிக்காவை அவர்கள் தேர்வு செய்யலாம்," ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.