வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (21:36 IST)

பணமதிப்பிழப்பால் மக்கள் இறந்ததற்கு மோதி காரணமில்லை: பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி

2014ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோதி தூய்மையானவர் என்றும், பணமதிப்பிழப்பில் மக்கள் இறந்ததற்கு அவர் காரணம் அல்ல என்றும் கூறினார்.
கேரளத்தில் பாஜக 14 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. அதில் முக்கிய தொகுதியாக திருச்சூர் தொகுதி கருதப்படுகிறது. திருச்சூரில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிபிசியின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசினார். அவர் அளித்த பேட்டியிலிருந்து.
 
தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் அரசியலில் இறங்கியுள்ளனர். கமலின் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. ஆனால் கேரளா மக்கள் திரைநட்சத்திரங்களை அரசியல் தலைவர்களாக பார்ப்பதில்லை. எந்த நம்பிக்கையில் தேர்தலில் களமிறங்கியுள்ளீர்கள்? உங்கள் ரசிகர்கள் உங்கள் வாக்காளர்களாக மாறுவார்களா?
 
அதுகுறித்து யோசிக்கவில்லை. எனக்கு உரிமை உள்ளது. நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். கடந்த 22 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். என்னை மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். அதற்கு சினிமா என்ற ஒரு களம் தேவையில்லை, இருக்கவும் முடியாது. என்னுடைய ரசிகர்கள், சாதாரண மக்கள், இந்த நாட்டு குடிமகன்கள், அவர்கள் எனக்கு வாக்களிப்பார்கள். எல்லாவிதமான பாகுபாடுகளை தவிர்த்தவர்கள்- சாதி, மதம், நிறம், கொள்கைகள் என எல்லா வித்தியாசங்களை கடந்தவர்கள், எனக்கு ஓட்டு போடுவார்கள். நான் மிகவும் நேர்மையாக வேலை செய்திருக்கிறேன் என்பதை மக்கள் அறிவார்கள்.
 
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு மனநிலை உள்ளது. ஒவ்வொரு முறை பிரதமர் நரேந்திர மோதி இங்கு வரும்போதும் #GOBACKMODI உலக அளவில் கூட ட்ரெண்ட் ஆகியுள்ளது. பாஜகவுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
 
எதிர்ப்பு கிடையாது. எல்லா இடத்திலும் கொஞ்சம் விஷம் இருக்கும். அந்த விஷத்தை நாடு முழுவதும் பரப்பி, இந்த நாட்டை சிலர் கொள்ளையடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எந்த விதமான நபர்கள் கூட்டு சேர்த்திருக்கிறார்கள் என்பதை பார்த்தால் புரியும். இந்த தேர்தலில் மக்கள் எந்த பக்கம் என்பது தெரிந்துவிடும். உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நாட்டின் தலைவராக இருப்பவர் தூய்மையானவராக இருக்க வேண்டும். என்னுடைய தலைவர் நரேந்திர மோதி அரசியல் மேடைகளில், கட்சிக்காக, நாட்டுக்காக பேசுவார், ஆனால் மக்களின் உள்ளத்தை வெல்ல வேண்டும் என்றால் ஆட்சியின் மூலமாக மட்டுமே அது சாத்தியம். கடந்த 60 ஆண்டுகளில் குறைந்தது 40 ஆண்டுகளில் செய்ய வேண்டியதைக்கூடச் செய்யவில்லை, எதை செய்யக்கூடாதோ, அதைசெய்துவிட்டு , சேர்த்து கொண்டுபோய் எங்கோ வைத்துள்ளார்கள், அந்த கொண்டுவர கஷ்டப்படுகிறோம்.
 
 
ஊழலற்ற ஒரு தேசத்தை உருவாக்க ஒரு ஒற்றை நபர் படைபோல செயல்படும்போது, அந்த படையில் நான் இருந்துதான் ஆக வேண்டும். அதனால்தான், நான் நரேந்திர மோதியோடு இருக்கிறேன்.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவின் செயல்பாடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?குறிப்பாக பணமதிப்பிழப்பால் பலரும் அவதிப்பட்டார்கள். மக்களின் எதிர்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?
 
அது டிமானிடைசேஷன் அல்ல, ரீமானிட்டைசேஷன். இந்த நாட்டின் பொருளாதாரத்தில் வீக்கத்தை கொண்டுவருவது வளர்ச்சி அல்ல, அதை படிப்படியாக உயர்த்தவேண்டும். பணமதிப்பிழப்பு சரியான முடிவு. வரிசையில் நின்று மக்கள் இறந்ததற்கு காரணம் யார்? இது ஒரு முக்கியமான, எதிர்பாராத சமயம், அவசர நிலை போன்றது என்பதால், வங்கிகள் முறையாக மக்களுக்கு உதவியிருக்க வேண்டும். வங்கிக்கு வருபவர்களுக்கு இருக்கை, தண்ணீர் வசதி ஆகியவை வழங்க வேண்டும் என்பது வங்கியின் கடமை.
 
 
மோதி ஒவ்வொரு வங்கியாக வந்து வசதிகளை செய்யவேண்டுமா? மக்களை கொலை செய்தது யார்? ஒரு அரசாங்கத்தை அடித்து கீழே போடுவதற்கு செய்யும் சூழ்ச்சிதான் இந்த எதிர்மறையான பிரசாரம். நீங்கள் என்னை அமர்த்தியாசெனுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள், நான் இதைபற்றி பேசுகிறேன்.
 
சமீபத்தில் மோதியின் அறிக்கை ஒன்று சர்ச்சையாகியுள்ளது. கேரளாவில் கடவுளின் பெயரை சொல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்று அவர் கூறினார். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்துள்ளார்கள். கேரளா முதல்வர் பினராயி விஜயன் வழக்கை சந்திக்கும் நபர் யாராவது இருந்தால் ஆதாரம் காட்டட்டும் என்று சவால் விட்டுள்ளார். மோதியின் கூற்று தவறானதா?
 
மோதி, பினராயி விஜயன் சொன்னது இருக்கட்டும். நீங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் போய் பாருங்கள். நான் அந்த வார்த்தைகளை உதிர்க்ககூடாது. என் உள்ளமும், என் நாக்கும் மோசமாக கட்டப்பட்டுள்ளது. நாங்கள் அந்த தடைகளை உடைப்போம். பொறுத்திருந்து பாருங்கள். எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளது என்று பாருங்கள். (அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக பலமான போராட்டத்தை நடத்தியது. அதனால் கேரளாவில் மதத்தின் பெயர் அல்லது கடவுளின் பெயரை குறிப்பிட்டு ஓட்டு கேட்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது)
 
கேரளா ஆபத்தான நிலையில் உள்ளது. கேரள காவல்துறை சரிசெய்ய முடியாது, ராணுவத்தை கூப்பிடுங்கள், துணை ராணுவத்தை கூப்பிடுங்கள்.. மக்கள் கண்ணீரோடு பேசுகிறார்கள். இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமையை நான் பார்த்ததில்லை. பல வீடுகளில் குத்துவிளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த விஷயம் முடிவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
 
என்ன காரணத்திற்காக திருச்சூர் தொகுதி உங்களுக்கு ஒதுக்கப்பட்டது? ஏன் நீங்கள் இங்கு போட்டியிட முன்வந்தீர்கள்?
 
ஜெயிப்பதற்காக, வெற்றிகாக மட்டுமே. நான் என்ன மாதிரியான நபர், திறமையான எம்.பி நான் என என் கட்சிக்கு தெரியும், என் வேலையை ஆராய்ந்து, என்னை பற்றிய தகவல்களை கொண்டு இந்த முடிவை எடுத்தார்கள், என் மீது நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
 
ஒரு வேளை தேர்தல் முடிவு உங்களுக்கு சாதகமானதாக இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?
 
கேரளாவில் உள்ள 20 தொகுதியிலும் ஒரு நபர்தான் வெற்றி பெறுகிறார். என்னை பற்றியும், என் அரசியல் செயல்பாடு குறித்தும் கட்சி தலைமைக்கு நன்கு தெரியும். மற்றவர்கள் வாழவில்லையா? அவர்கள் போராடவில்லையா? நான் தொடர்ந்து வேலைசெய்வேன், இப்போது நியமன எம்பியாக இருக்கிறேன், தொடர்ந்து வேலைசெய்வேன், இந்த நாடு முழுவதும் எனது தொகுதி என்று எண்ணுவேன்.