வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (22:08 IST)

தாவர கழிவுகளில் இருந்து `பையோ பிளாஸ்டிக்`: இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

தாவர கழிவுகளில் இருந்து `பையோ பிளாஸ்டிக்`: இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
செல்ஃபோன்கள், கிளாஸ்கள், மருந்துகள், டூத்பிரஷ்கள் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நம் வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருள்கள் குப்பையாக மாறும் போது, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காக உள்ளது. இதற்கு கெளஹாத்தி ஐ.ஐ.டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பையோ பிளாஸ்டிக் மூலம் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.
 
உலகம் முழுக்க பிளாஸ்டிக் கழிவுகள் என்பது பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. சாதாரணமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பெட்ரோகெமிக்கல் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதை முறைப்படி அகற்றாவிட்டால், பல நூறு ஆண்டுகளுக்கு அது மக்காமல் இருக்கும்.
 
இந்நிலையில், அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டியின் ஆராய்ச்சியாளர்கள் தாவரக் கழிவுகளில் இருந்து பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறுகிய காலத்தில் மக்கிவிடும்.
 
பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் தாவரக் கழிவு
 
``பயோ பிளாஸ்டிக் என்பது கரும்பு போன்ற பல வகை தாவரங்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தாவரங்களிலிருந்து குறிப்பிட்ட ரசாயனங்களைப் பிரித்து, பின்னர் சுத்தப்படுத்துவோம். அதன் பிறகு, கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து பயோ பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம். பாலிமரைசேஷன் என்ற செயல்முறையின்படி, பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குகிறோம். வழக்கமான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவற்றை இந்த பயோ பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கலாம். இவை சுற்றுச்சுழலுக்கும், இயற்கைக்கும் எந்த தீங்கும் விளைவிக்காது.`` என ஐ.ஐ.டியின் பேராசிரியர் விமல் கட்டியார் கூறுகிறார்.
 
விமல் கட்டியார்
 
இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு வகையான பொருள்களைத் தயாரிக்க முடியும். தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கிளாஸ்கள், பொம்மைகள் மற்றும் சிகிச்சைகளில் பயன்படுத்தும் மருத்துவப் பொருள்களும் தயாரிக்கலாம் என கூறுகின்றனர்.
 
இந்தப் பொருள்கள் மற்ற பொருள்களைப் போல மண்ணில் மக்கிவிடும். தாவரங்களுக்கு உரமாகவும் அவை மாறிவிடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
 
தற்போது உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான இது மிகவும் விலை மலிவானது. இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், ஆறு முதல் எட்டு மாதங்களில் மக்கிவிடும்.
 
``இந்த பயோ பிளாஸ்டிக் பொருட்களை சாதாரண பிளாஸ்டிக் குப்பைகளுடன் சேர்த்து குப்பைத் தொட்டியில் மக்கள் போட்டுவிட்டால், என்ன செய்வது?. மேலும், பயோ பிளாஸ்டிக் , சாதாரண பிளாஸ்டிக் உடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்டால், அதன் தன்மையையே இழந்துவிடும். எனவே பயோ பிளாஸ்டிக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்பு, இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.`` என கூறுகிறார் பிளாஸ்டிக் குறித்த ஆராய்ச்சிகளின் ஈடுபட்டு வரும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த சுவாதி சிங்.
 
தினசரி வாழ்வில் இந்தப் பொருள்களைப் பயன்படுத்தும் போதுதான், இது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிய வரும்.