வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (13:30 IST)

கட்டபொம்மன் ஒரு தெலுங்கர், கொள்ளைக்காரர் என்கிற வாதங்கள் சரியா?வரலாற்று திரிபுகளும் உண்மைகளும்

(கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது)

 

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

 

தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகளையும் மதுரையிலிருந்து கொள்ளையடித்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது.

 

"அப்படிப்பட்ட மாலிக்கபூரைக் கூட “கொள்ளைக்காரன் மாலிக்கபூர்” என யாரும் எழுதுவதில்லை, ஆனால் வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, ஆங்கிலேயர்கள் நடத்திய இறுதி விசாரணையில் கூட எவ்வித கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம்.

 

தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி எனும் ஒரு சிறிய பாளையத்தை ஆண்ட பாளையக்காரர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆனால் இந்த சிறிய பாளையத்தை பல கட்ட போர்களுக்கு பிறகு தான் ஆங்கிலேய அரசால் முழுமையாக கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

 

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது ஏன்?
 

“ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்தது, தனது படைவீரர்கள் உதவியோடு ஆங்கிலேய அரசுக்கு எதிராக புரட்சி செய்து பல ஆங்கிலேய சிப்பாய்களை கொன்றது, மற்ற பாளையக்காரர்களையும் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய தூண்டியது உட்பட பல காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் கயத்தாரின் பழைய கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் மேஜர் பானர்மேன் மற்றும் பாளையக்காரர்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்”, என 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனாலும் கூட வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதும் உண்டு. இது குறித்து சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன.

 

இவ்வாறு சொல்லப்படுவதன் பின்னணி என்ன, வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவர் உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதால் தான் தூக்கிலிடப்பட்டாரா என தெரிந்து கொள்ள நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வே. மாணிக்கத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

 

வே. மாணிக்கம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கட்டபொம்மன் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். கட்டபொம்மன் கும்மிப்பாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை, வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, தானாபதிப் பிள்ளை வரலாறு, கட்டபொம்மன் வரலாற்று உண்மைகள், ஊமத்துரை வரலாறு, போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

 

கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னென்ன?
 

கட்டபொம்மன் மீதான இறுதி விசாரணையின் போது வெள்ளையரால் நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன,

 
  • வரி ஒழுங்காகக் கட்டவில்லை
  • கலெக்டர் அழைத்த போது சந்திக்க மறுத்தார்
  • சிவகிரியாரின் மகனுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பினார்
  • பானர்மேன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுச் சரணடையாமல் எதிர்த்து போரிட்டார்.
     

"அவர் மீது கொள்ளையடித்தார் என எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. ஆனாலும் கூட சிலர் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது தவறான குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் ஏதுமின்றி முன் வைக்கிறார்கள்” எனக் கூறுகிறார் வே.மாணிக்கம்.

 

அவர் தொடர்ந்து பேசியது, “ஆங்கிலேய அதிகாரி மாக்ஸ்வெல் நில அளவை எனும் பெயரில் தன் பகுதிகளை எட்டையபுரத்தாருக்கு கொடுத்ததைக் கட்டபொம்மன் ஏற்கவில்லை. தன் தந்தையைப் போலவே வெள்ளையரை எதிர்த்து பல செயல்களில் ஈடுபட்டார், வரி கட்ட மறுத்தார். கலெக்டர் ஜாக்சன் பலமுறை கடிதம் எழுதியும் கட்டபொம்மன் அவரை சென்று பார்க்கவில்லை.

 

இதனால் கோபமடைந்த ஜாக்சன், கட்டபொம்மனை கைது செய்ய உடனே படை அனுப்புமாறு கவர்னருக்கு கடிதம் எழுதினார். ஆனால் கவர்னரோ, கட்டபொம்மனை அழைத்து பேசுமாறு ஜாக்சனுக்கு ஆலோசனை வழங்கினார். எனவே சமரசம் பேச 15 நாட்களுக்குள் இராமநாதபுரம் வருமாறு கட்டபொம்மனுக்கு கடிதம் அனுப்பிவிட்டு குற்றாலம் சென்று விட்டார் கலெக்டர் ஜாக்ஸன்.

 

கடிதம் கண்டு தன்னைக் காண வரும் கட்டபொம்மனை ஆத்திரமூட்டி, ஊர் ஊராக அலைக்கழித்துச் சந்திக்க விடாமல் செய்துவிட்டால் அதையே காரணம் காட்டி பாளையக்காரர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிடலாம் என்பதே ஜாக்சன் திட்டம். இவ்வாறு குற்றாலம், சொக்கம்பட்டி, சிவகிரி, சேத்தூர் என ஒவ்வொரு ஊராக அலைக்கழிக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியாக ஜாக்சனை இராமநாதபுரத்தில் சந்தித்தார்” என்றார்.

 

கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த போது நடந்த கலவரம்
 

தொடர்ந்து பேசிய வே.மாணிக்கம், “இராமநாதபுரம் பேட்டி கட்டபொம்மனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவர் மட்டுமே கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவரது தம்பிமார், மாப்பிள்ளைமார், மாமனார், மற்றும் படைகள் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 

மூன்று மணிநேரம் தண்ணீர் கூட தராமல் அவரை காக்க வைக்கிறார்கள். மேலும் நிர்வாகத்தின் உத்தரவு வரும் வரை கோட்டைக்குள்ளேயே கட்டபொம்மன் தங்கியிருக்க வேண்டுமென சொல்லப்பட்டது. தன்னை சிறைப்படுத்த முயற்சி நடக்கிறது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறுகிறார். அப்போது அங்கு ஒரு கலவரம் நடைபெறுகிறது, அதில் லெப்டினன்ட் கிளார்க் எனும் ஆங்கிலேய அதிகாரி கட்டபொம்மனால் கொல்லப்படுகிறார்” எனக் குறிப்பிடுகிறார்.

 

இந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக கட்டபொம்மனின் இரு கடிதங்கள், ஆங்கிலேய அதிகாரி டேவிட்சனின் கடிதம், ஆங்கிலேய அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை ஆகியவை உள்ளன. இராமநாதபுரம் பேட்டியில் ஜாக்சன் நடந்து கொண்டது தவறு என கண்டுகொண்ட ஆங்கிலேய நிர்வாகம் அவரை பதவி நீக்கம் செய்து, லூசிங்டன் என்பவரை கலெக்டராக நியமித்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 177-178).

 

இராமநாதபுர கடை வீதியை கொள்ளையிட்டாரா கட்டபொம்மன்?
 

வே.மாணிக்கம் தொடர்ந்து பேசும்போது, “இராமநாதபுர பேட்டியில் நடந்த கலவரத்தோடு சேர்த்து, அதற்கு முன்னும் பின்னும் நடந்த விஷயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். கலெக்டர் ஜாக்சனை சந்திக்க புறப்பட்டு வந்த கட்டபொம்மனும் அவரது வீரர்களும், பலநாட்கள் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் கட்டபொம்மன் அவமதிக்கப்படுகிறார்.

 

அவரது தம்பிமாரும், மாப்பிள்ளைமாரும் பேட்டி நடக்கும் முன்பே தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஆங்கில வீரர்களால் ஏலம் போடப்பட்டன. அங்கு நடந்த மோதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பலர் உயிர் துறந்தனர். முற்றுகையை உடைத்து வெளியே வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்டபொம்மனின் படை வீரர்கள் கொதித்துப்போய் இருந்தனர். எனவே திரும்பி செல்லும் வழியில் இருந்த இராமநாதபுர கடை வீதியை படைவீரர்கள் அழித்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒரு செயலாகவே இதைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

 

இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, “இந்த கலகத்தில் கட்டபொம்மனை குறை சொல்வதற்கில்லை. தன்மான கௌரவத்திற்கு பங்கமேற்படும் போது, கோழையைப் போல அவர் நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறாகும். மேலும், தன் தலைவனுக்கு ஆபத்து ஏற்பட இருக்கும் சமயம் அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பரிவாரங்கள் கைக்கட்டிச் சும்மா இருக்காது. உணர்ச்சி வசப்படத்தான் செய்யும்” என்று அறிக்கை கொடுத்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 173-177).

 

“இதே போல அருங்குளம், சுப்பலாபுரம் என எட்டயபுரத்தை சேர்ந்த இரண்டு கிராமங்கள் மற்றும் ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் போன்ற இடங்களில் கட்டபொம்மன் கொள்ளையிட்டார் என கூறுகிறார்கள். ஆனால், நில அளவை என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் அந்த பகுதிகளை கட்டபொம்மனிடமிருந்து பறித்தனர், சினம் கொண்ட கட்டபொம்மன் அந்த பகுதிகளில் தனது ஆட்களைக் கொண்டு உழுது பயிரிட்டார். இவ்வாறு உழுது பயிரிட்டதை கொள்ளையடித்தார் என சிலர் திரித்து எழுதினார்கள்”.

 

கட்டபொம்மன் ஒரு தெலுங்கர் எனும் வாதம் ஏன் எழுகிறது?
 

“கட்டபொம்மனை தெலுங்கன் என்று கூறி நம்மிடமிருந்து பிரிக்கிறார்கள். அவரது முன்னோர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான், ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் நம் தமிழ் மண்ணில் பிறந்தவர்” என்றும் வே. மாணிக்கம் கூறுகிறார்.

 

“அப்போதிருந்த தமிழ்நாட்டின் பாளையக்காரர்கள் பலர் இவரது தலைமையின் கீழ் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட விரும்பினார்கள். கட்டபொம்மன், இனம், மொழி, சாதி வேறுபாடு பார்க்காத ஒரு பாளையக்காரராக இருந்ததால் தான் இது சாத்தியமானது. வீரபாண்டிய கட்டபொம்மனின் அவைப்புலவராக சங்கர மூர்த்தி எனும் தமிழ்ப்புலவரே இருந்துள்ளார். கட்டபொம்மன் குறித்து பல்வேறு கதைப்பாடல்கள் ஏட்டுச்சுவடிகளில் உள்ளன.

 

கட்டபொம்மனுடனான பாஞ்சாலங்குறிச்சி போரில் கடுமையான சேதங்களை சந்தித்த மேஜர் பானர்மேன் கூட கட்டபொம்மனை “அஞ்சா நெஞ்சத்துடன் விளங்கினார்” என பாராட்டினார் (மேஜர் பானர்மேன் கவர்னருக்கு எழுதிய கடிதம்). எதிரிகளே வியந்து பாராட்டிய ஒரு மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரைப் பற்றிய பொய்க் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு, உண்மையான வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார் எழுத்தாளர் வே.மாணிக்கம்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.