1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (20:51 IST)

பெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்

ஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறார் என்பது உள்பட தனிநபர்களின் அந்தரங்க தரவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படுவதாக 'பிரைவேசி இன்டர்நேஷனல்' (PL) நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்துடன் என்னென்ன தகவல்கள் பகிரப்படுகின்றன என்று ஆராய்வதற்காக பெண்களின் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் செயலிகளில் இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

அந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பெண்களால் என்ன கருத்தடை சாதனம் பயன்படுத்தப்பட்டது, எப்போது மாதவிடாய் வரும், அறிகுறிகள் என்ன ஆகிய விவரங்கள் ஃபேஸ்புக் உடன் பகிரப்படும் தகவல்களில் அடங்கியுள்ளன.
இந்த ஆய்வின்போது, தங்களுடைய செயலியின் தனியுரிமை கொள்கைள் மாற்றிற்கு உள்ளாக்கப்படவுள்ளதாக அந்த செயலிகளில் ஒன்றை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்தது,

உடல்நலம் சார்ந்த தகவல்கள், பாலியல் தரவுகள் தொடங்கி, எண்ணவோட்டம், பயனர்கள் உண்பவை, குடிப்பவை மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்ணொருவர் பயன்படுத்தும் சுகாதார பொருட்கள் வரை மிகவும் அந்தரங்க தரவுகளை இந்த மாதவிடாய் செயலிகள் சேகரிக்கின்றன.

இத்தகைய தகவல்களை பெண்கள் அந்த செயலிகளிடம் அளிப்பதற்கு பிரதிபலனாக, அந்த மாதத்தில் அவர்கள் கரு வளத்தோடு இருக்கின்ற நாட்கள் அல்லது அடுத்த மாதவிடாய் காலம் எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ளும் சேவையை இந்த செயலிகள் அளிக்கின்றன.
 

இத்தகைய அந்தரங்க தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்தோடு பகிர்வது சமூக வலையமைப்பின் மென்பொருள் மேம்பாட்டு கூறுகள் (எஸ்டிகே) மூலம் நடைபெறுகிறது. இதன் மூலமாக, விளம்பரம் செய்வோருக்கு தரவுகள் அளிக்கப்படுகின்றன.

இதனால் குறிப்பிட்ட செயலியின் பயனருக்கு என்ன பொருட்களை தேவையோ அவை பற்றிய விளம்பரங்கள் சென்று சேருகின்றன. இவ்வாறு விளம்பரம் செய்வோருக்கு தரவுகளை வழங்குவதன் மூலம் இந்த மாதவிடாய் கண்காணிப்பு செயலிகள் வருவாய் ஈட்டி கொள்கின்றன.

பீரியட் டிராக்கர் (Period Tracker), பீரியட் டிராக் ஃபுலோ (Period Track Flo ) மற்றும் குளு பீரியட் டிராக்கர் (Clue Period Tracker) போன்ற மிகவும் பிரபலமான செயலிகள் இத்தகைய தரவுகளை ஃபேஸ்புக்குடன் பகிர்வதில்லை என்பதை 'பிரைவேசி இன்டர்நேஷனல்' கண்டுபிடித்துள்ளது.

பிளாக்கால் டெக் நிறுவனத்தின் மாயா (Maya) (கூகுள் பிளேயில் 50 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது), மோப்ஆப் டெவலப்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் எம்ஐஏ (MIA) (10 லட்சம் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது) மற்றும் லின்ச்பின் ஹெல்த் நிறுவனத்தின் பீரியட் டிராக்கர் (My Period Tracker) (10 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது) ஆகிய பிற செயலிகள் இத்தகைய அந்தரங்க தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர்கின்றன.

பிரைவேசி இன்டர்நேஷனல்' இது பற்றி தெரிவிக்கையில், "பெருமளவு மக்களை சென்றடைந்துள்ள இந்த செயலிகளை ஆய்வு செய்ததில், உலக அளவில் பல லட்சக்கணக்கான பயனர்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் ஃபேஸ்புக்கோடு பகிரப்படுவது தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த செயலியை பயன்படுத்துவோரின் சுதந்திரமான மற்றும் நேரடியான சம்மதத்தை, வெளிப்படையாக பெறாமல், பயனர்களின் உடல் நலம் அல்லது பாலியல் வாழ்க்கை போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்பினருக்கு பகிரப்படுகிறது என்பதும் தெரிய வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இத்தகைய அந்தரங்க தகவல்களை திரட்டுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் எஸ்டிகே மற்றும் அனலிடிக்ஸ் எஸ்டிகே ஆகிய இரண்டையும் உடனடியாக அகற்றியுள்ளதாக மாயா செயலி, 'பிரைவேசி இன்டர்நேஷனல்' நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த நிறுவனத்தின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளையும், அந்தரங்க கொள்கைளையும் ஒப்புக்கொள்வோருக்கு ஃபேஸ்புக் விளம்பர எஸ்டிகே-யை பயன்படுத்துவதை தொடர்வதாகவும் அது கூறியுள்ளது. ஆனால், தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவுகள் அல்லது மருத்துவ தரவுகள் எதுவும் பகிரப்படாது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

மாயா செயலியால் அணுகப்படும் எல்லா தரவுகளும், இந்த செயலி சரியாக செயல்படுவதற்கு மிகவும் முக்கியமானதாகும். மாதவிடாய் சுழற்சியை பொறுத்தவரை தகவல்களை கணிப்பது சிக்கலாது மற்றும் இது ஆயிரக்கணக்கான காரணிகளை சார்ந்துள்ளது.

"மாயா செயலிக்குள் நுழைவதற்கு முன்னரே எமது நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் அந்தரங்க கொள்கைகள் பற்றி பயனர்களுக்கு தெரிவித்துவிடுகிறோம். மக்கள் அவர்களுடைய இத்தகைய தரவுகளை எங்களது தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொண்டு, விரும்பினால் அந்த கணக்கையே அழித்துவிட முடியும்" என்றும் அது கூறியுள்ளது.

ஆனால், லின்ச்பின் ஹெல்த், 'பிரைவேசி இன்டர்நேஷனல்' நிறுவனத்திற்கு பதிலளிக்கவில்லை. தங்களின் பதில் வெளியிடப்படுவதை விரும்பவில்லை என்று எம்ஐஏ தெரிவித்தது.

"செயலிகளை உருவாக்குவோர் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார தகவல்களை எங்களுக்கு அனுப்புவதை எங்கள் சேவை நிபந்தனைகளே தடுக்கின்றன. அவ்வாறு செய்வதை அறிய வருகிறபோது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம்" என்று ஃபேஸ்புக் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
 

மேலும், மக்கள் விரும்புவதை இலக்கு வைத்தே விளம்பரம் செய்யப்படுவதாகவும், பயனர்கள் குறித்து மற்ற செயலிகள் அளிக்கும் தரவுகள் இதற்கு பயன்படுத்தப்படுவதில்லை என்றும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.
இரு நிறுவனங்களையும் பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால், இந்த கட்டுரையை வெளியிடும் வரை எந்த பதில்களையும் அவை வழங்கவில்லை.
இத்தகைய செயலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எவ்வாறு ஒத்ததாக உள்ளது என்ற தீவிர கவலை எழுந்துள்ளதாக 'பிரைவேசி இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.

"சட்டபூர்வ கடமைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதும், இத்தகைய செயலிகளின் சேவையை பயன்படுத்த முடிவு செய்கிறபோது பயனர்கள் வைக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதும் அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பாகும்" என்று 'பிரைவேசி இன்டர்நேஷனல்' கூறியுள்ளது.

செயலிகளும், வணிக நிறுவனங்களும் தாங்கள் பெறுகின்ற தரவுகளை ஃபேஸ்புக்கோடு பகிர்ந்து கொள்வதை அந்த செயலியின் பயனர்கள் தடுக்கும் வசதி வழங்கப்படும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.