1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (21:23 IST)

மகாத்மா காந்தி பின்பற்றிய இயற்கை வழி மருத்துவத்தின் முன்னோடி ரிக்லி; யார் இவர்?

மஹிமா ஜெயின்
 
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லோவேனியாவில் பிலெட் ஏரிக்கு இயற்கை வழி சிகிச்சை முறையின் அருமைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்தனர். ஸ்லோவேனியாவில் வடமேற்குப் பகுதியில் ஜூலியன் ஆல்ப்ஸில் செங்குத்தான மலா ஒசோஜ்னிகா மலையின் உச்சிக்குச் செல்லும் குறுகலான பாதையில் நான் சென்றபோது, என் பார்வைக்கு தெரிந்தும், தெரியாமலும் எல்லைகளைக் கொண்டதாக 144 ஹெக்டரில் பரந்துள்ளது பிலெட் ஏரி.
நீல நிறத்தில் உள்ளது. சிகரங்களுக்கு அப்பால் சூரியன் மேலே எழுந்து கொண்டிருந்தான். 17 ஆம் நூற்றாண்டின் உயர் கோபுர வடிவமைப்பில் உள்ள கட்டடம் ஏரியின் மத்தியில் கீழே கண்ணீர்த் துளி வடிவிலான தீவில் உள்ளது.
 
மலையின் உச்சியில் இருந்து சூரிய உதயத்தின் முதலாவது கதிர்களைக் காண வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டமாக இருந்தது. பொழுது புலர்வதை எதிர்பார்த்து பறவைகள் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன. லேசான தென்றல் தவழத் தொடங்கி இருந்தது. கீழே காட்டுக்குள் இருந்து, நான் வந்த பாதையில் மக்கள் நடமாடும் சப்தம் கேட்டது, ஐரோப்பா முழுவதிலும் இருந்து மருத்துவ சுற்றுலாவுக்காக வந்தவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே பாதை அது. இதற்கெல்லாம் ஸ்விஸ் ஹீலர் அர்னால்டு ரிக்லிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
 
நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மூன்று மூலகங்கள் - சூரியன், நீர் மற்றும் காற்று மூலகங்கள் - அடிப்படையில் சிகிச்சை அளிக்கக் கூடிய, ரசாயன மருந்துகளைத் தவிர்த்த மாற்று மருத்துவ முறையாக நேச்சுரோபதி மற்றும் ஹைட்ரோபதி சிகிச்சை முறையை உருவாக்கியவர் ரிக்லி. 1855 ஆம் ஆண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தம் வரையில், வசதிமிக்க ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள், ஏரியின் கரையில் உள்ள அவருடைய இயற்கை முறை சிகிச்சை நிலையத்தைத் தேடி அங்கு குவிந்தனர்.
 
ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் சிறிய நகரமாக இருந்த பிலெட் நகரம், சிகிச்சைக்கான முக்கிய இடமாக உருவாக அதுவே காரணமாக இருந்தது. 1870களில் பிலெட் நகரைச் சுற்றி ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதை அடுத்து அங்கு நிறைய மக்கள் வரத் தொடங்கினர்.
 
``இயற்கை வழி சிகிச்சையில் ரிக்லி முன்னோடியாக மட்டுமின்றி, பிலெட் நகரில் ஸ்பா மற்றும் உடல் சிகிச்சை சுற்றுலாவையும் தொடங்கி வைத்தவராக இருந்தார்.
 
உண்மையான மார்க்கெட்டிங் மனிதராக அவர் இருந்தார்'' என்று வோஜ்கோ ஜாவோட்னிக் கூறுகிறார். அர்னால்டு ரிக்லியின் தடங்களைக் கண்டுபிடித்து எழுதிய பெண் எழுத்தாளர் இவர். மாசுபாட்டின் பாதிப்பால் துன்புறக்கூடிய, வேகமான தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வரும் நகரங்களில் தினசரி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள நகரவாசிகளுக்கு இயற்கை மற்றும் நல்ல ஆரோக்கிய கலவையை அளிக்க வேண்டும் என்பது ரிக்லியின் நோக்கமாக இருந்தது.
 
வசதிமிக்க ஐரோப்பியர்கள் ஆடம்பரமான பங்களாக்களில் விடுமுறைக் காலத்தை கழிப்பது பற்றி பிரபலமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பிலெட் நகரம் வேறு காரணத்துக்காக விடுமுறைக் கால தங்குமிடமாக இருந்தது. தொலைதூர இடங்களில் இருந்து ராணுவ கட்டுப்பாடு போன்ற சூழலில் வாழ்வதற்காக ஐரோப்பியர்கள் பயணம் மேற்கொண்டனர். ஆனால் எதற்காக அப்படி வந்தார்கள்?
 
``அது எல்லாம் கலந்த கலவையாக இருந்தது; பிலெட் நகரின் அருமையான சீதோஷ்ண நிலை, ஜூலியன் ஆல்ப்ஸ் சுற்றி வரும் நடைபாதைகள், உச்சியில் இருந்து பார்க்கும் காட்சி அமைப்பு, இதெல்லாவற்றுக்கும் மேலாக ரிக்லியின் சிகிச்சை முறைகள்'' என்று டாக்டர் ஜ்வோன்கா ஜுபானிக் ஸ்லாவெக் கூறுகிறார். இவர் மருத்துவ வரலாறு குறித்த லிஜுபில்ஜனா கல்வி நிலையத்தின் பல்கலைக்கழகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
 
``ஹைட்ரோ தெரபி (நீர் அடிப்படையிலான சிகிச்சை), ஹீலியோ தெரபி (சூரியனை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை), பருவநிலை தெரபி ஆகியவற்றுடன், சிறிதளவு உணவுப் பட்டியல் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் ஆகியவை இருந்தால் மக்கள் குணம் அடைவார்கள் என்று அவர் நிரூபித்துள்ளார்.'' வேறு வகையில் சொல்வதானால், இளஞ்சூடான மற்றும் குளிர்ந்த நீர், சூரிய வெளிச்சம் மற்றும் பருவநிலை (மலைப் பகுதி காற்று) ஆகியவற்றை, நோய்த் தடுப்பு மற்றும் குணமாக்கலுக்கு அவர் பயன்படுத்தியுள்ளார்.
 
பிலெட் ஏரியை முன்னணி ஆரோக்கிய ஸ்தலமாக ஆக்கினார் ஸ்விஸ் ஹீலர் அர்னால்டு ரிக்லி.
மூன்று மூலகங்களைக் குறிப்பிட்டு ரிக்லியின் குறிக்கோள் எளிமையானதாக இருக்கிறது: ``தண்ணீர் நல்லது. காற்று இன்னும் நல்லது. ஒளி எல்லாவற்றையும் விட சிறந்தது'' என்பதே அது.
 
``வெளிச்சமும் காற்றோட்டமும்'' உள்ள குடில்களில் விருந்தினர்களை தங்க வைப்பார். மூன்று புறங்களிலும் மரக் கட்டைகளால் உருவாக்கப்பட்ட சுவர்களும், ஏரியை நோக்கிய நான்காவது பக்கத்தில் திரை போட்டதாகவும் அந்தக் குடில் இருக்கும். ஏரியின் அழகை ரசிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். உடலில் நச்சுகளை வெளியேற்றவும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் கம்பு ரொட்டி, பால், பழங்கள் மற்றும் அவரை வகைகள் என மிதமான சைவ உணவுகள் வழங்கப்படும். புகைபிடிக்கவும், மது அருந்தவும் அங்கு தடை இருந்தது. தடையை மீறியதாகக் கண்டறியப் பட்டால் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
 
சிகிச்சை விடியலில் தொடங்கி மாலை வரையில் தொடரும். ஆண்கள் காட்டன் சட்டைகள் மற்றும் டிரவுசர்கள் அணிந்திருப்பர். பெண்கள் கை வைக்காத ஆடைகள் கால் முட்டி வரையில் இருக்கும் ஆடைகள் அணிந்திருப்பர். வெறும் காலுடன் பிலெட் நகரை சுற்றி மலையில் அவர்கள் நடந்து செல்ல வேண்டும்.
 
அவரவர் உடல் நிலையும், ஆணா பெண்ணா என்பதைப் பொருத்தும் இதற்கான கால அளவு, சரிவுப் பாதை மற்றும் எவ்வளவு தொலைவு என்பவை முடிவு செய்யப்பட்டிருக்கும்; புல்வெளிகளில் குறுகிய நடைபயணம் என்பது 30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். நீண்ட நடைபயணம் என்பது நான்கு மணி நேரம் வரை என்பதாக இருக்கும். அது பிலெட் தொடங்கி லேசான சரிவு கொண்ட ஸ்ட்ராஜா வரையிலும், நான் சென்று கொண்டிருந்த மலா ஓசோஜ்னிகா வரையிலும் நடப்பதாக இருக்கும்.
 
கட்டணத்தை தங்கமாக செலுத்த மக்கள் தயாராக இருந்தனர்.
 
வெளியிலேயே சிறிது காலை உணவு சாப்பிட்ட பிறகு, நோயாளிகள் `பருவநிலை சிகிச்சை' பெறுவர். புத்துணர்வான மலைப் பகுதி காற்றில் உடற்பயிற்சிகள் செய்வதாக அது இருக்கும்; ஹீலியோ தெரபி, ஏரியைச் சுற்றி மரப் பலகைகள் மீது சூரியக் குளியல் (ஏறத்தாழ நிர்வாணமாக) இருக்கும்; நீராவி, குளிர் மற்றும் இளஞ்சூடான நீரில் குளியல் என்பதாக இருக்கும்.
 
உடலில் நச்சுகளை நீக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் அந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓய்வு எடுப்பதும் முக்கியமானது. ஒவ்வொரு இரவும் நோயாளிகள் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பதும் விதிமுறையாகும். மாலை நேரங்களில் பிறருடன் கலந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் இருக்கும். ஏரியில் படகு சவாரி செய்வது, டென்னிஸ் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது அல்லது இசை கேட்பது என அவை இருக்கும்.
 
இவை அனைத்துக்கும் அதற்கான கட்டணம் உண்டு. பெரும்பாலான நோயாளிகள் ஒரு மாத காலத்துக்கு அங்கே தங்குவார்கள் என்று ஜோவோட்னிக் குறிப்பிட்டுள்ளார். அந்த காலக்கட்டத்தில் மாதத்துக்கான கட்டணம் 12-15 பவுண்டாக இருந்தது. ஆண்டுதோறும் அது உயர்த்தப்பட்டு வந்துள்ளது.
 
1880களில் தொழிலாளரின் வருடாந்திர சராசரி ஊதியம் 20-30 பவுண்ட் என்று இருந்த நிலையில், இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானது தான். ``ஒரு வகையில், அடிப்படையில் அவர் கவர்ச்சிகரமான முகாம் வசதியை அளித்தார். அது இன்று மிகவும் நாகரிகமானதாகக் கருதப்படுகிறது'' என்று ஜாவோட்னிக் கூறியுள்ளார். ``கட்டணத்தை தங்கமாகச் செலுத்துவதற்கு மக்கள் தயாராக இருந்தார்கள் என்பதை சிலர் அளித்துள்ள நற்சான்றுக் கடிதங்கள் காட்டுகின்றன'' என்கிறார் அவர்.
 
புத்துணர்வான மலைப் பகுதி காற்றில் உடற்பயிற்சிகள் செய்வதுடன் கூடிய ``பருவநிலை தெரபி'' நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது.
 
ஆரம்பத்தில் உள்ளூர்வாசிகள் ரிக்லி மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவருடைய சிகிச்சைகள் அவமானம் ஏற்படுத்துபவை என்று கருதினர். அவருடைய நோயாளிகள், அந்த காலக்கட்டத்தில் இருந்த உடை நடைமுறைகளுக்கு மாறாக, குறைந்த அளவே ஆடைகள் உடுத்தி இருந்தனர், பெண்கள் இயற்கை வெளியில் சுதந்திரமாக நடமாடினர், வழக்கத்திற்கு மாறாக அதிக முறைகள் எல்லோரும் குளித்தனர் என்பதால் இந்த எதிர்ப்பு நிலை இருந்தது. தங்களுடைய நில அமைப்பை சாதகமாகப் பயன்படுத்தி ரிக்லி லாபம் சம்பாதிப்பதைப் பார்த்த ஸ்லோவேனியர்கள், அவருடைய பாணியைப் பின்பற்றினர். நகரில் தங்குமிடங்கள் பராமரித்து வந்தவர்கள், கட்டுபடியான கட்டணத்தில் வெளிச்சம் மற்றும் காற்றோட்டமான குடில்களை வாடகைக்கு அளித்தனர்.
 
பொய் சொல்லி நோயாளிகளை வரவழைக்கும் ஏமாற்றுக்காரர் என்று பல டாக்டர்கள் ரிக்லி பற்றி குற்றம் கூறினாலும், அவருடைய நோயாளிகள் வேறு வகையில் அவரைப் பார்த்தனர், தொடர்ந்து அவரிடம் சென்றனர். ஒரு நோயாளி தபால் அட்டையில் பின்வருமாறு எழுதியிருந்தார்: ``உங்கள் கடிதத்துக்கு ஆயிரம் நன்றிகள்.... நான் இப்போது நன்றாக உணர்கிறேன்.''
 
அர்னால்டு ரிக்லியின் சிகிச்சை முறையின் தேவை குறித்த தனது கட்டுரையில், ரத்த சோகை, ஒற்றைத் தலைவலி, நரம்புக் கோளாறுகள், மன உளைச்சல், மாதவிடாய் கோளாறு, கருப்பை தொற்று, மூலநோய், பக்கவாதம், வீக்கம் இல்லாத தோல் நோய்கள், பல வகையான பாலியல் குறைபாடுகளை சரி செய்ததாக ரிக்லி கூறியுள்ளார் என்று ஜுபனிக் ஸ்லாவெக் எழுதியுள்ளார். வெவ்வேறு உறுப்புகளுக்கு தனித்தனியாக அல்லாமல், உடலுக்கும் மனதுக்கும் முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் அவருடைய அணுகுமுறையாக இருந்தது.
 
வேகமாக தொழில் வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் பாதிப்புகளில் துன்புறும் நகரவாசிகளுக்கு, இயற்கை மற்றும் நல்ல ஆரோக்கியத்தைத் தருவது என்பதாக ரிக்லியின் சிகிச்சை முறை அமைந்திருந்தது.
 
தவிர்க்க முடியாமல், ரிக்லியின் சிகிச்சை முறைகள் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தின. தன்னுடைய சிகிச்சையின் உச்சகட்டத்தில் பிலெட், டிரியஸ்ட்டே, பிளாரன்ஸ் மற்றும் மெரான் ஆகிய இடங்களில் அவர் சிகிச்சை அளித்து வந்தார். தென்னிந்திய நேச்சுரோபதி என்ற தனது புத்தகத்தில், தனது வாழ்வில் இயற்கை வழி நடைமுறைகளைப் பின்பற்றி வந்த மகாத்மா காந்தி எப்படி ரிக்லியின் வழிமுறைகளை 20வது நூற்றாண்டில் பின்பற்றி வந்தார் என்பது குறித்து இவா ஜேன்சென் எழுதியுள்ளார்.
 
ஐரோப்பாவில் இயற்கை வாழ்க்கை முறைக்குத் திரும்புதல், சமைக்காத மற்றும் இயற்கை உணவுக்கு, நிர்வாணத்துக்கு, மாற்று மருத்துவத்துக்கு மாறுவதில் 20ஆம் நூற்றாண்டில் கவனம் செலுத்திய லெபென்ஸ்ரெபார்ம் என்ற இயக்கம் தோன்றியதில் இருந்து, ரிக்லியின் தாக்கம் வெளிப்பட்டது. சுவிட்சர்லாந்தில் லெபென்ஸ்ரெபார்ம் இயக்கத்தில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மோன்ட்டே வெரிடா மலையில் உட்டோபியன் கலாச்சாரத்தை தோற்றுவித்தவர்கள், ரிக்லியிடம் சிகிச்சை பெறுவதற்காக பிலெட் நகருக்கு வந்திருக்கிறார்கள் என்று ஜாவோட்னிக் தெரிவிக்கிறார்.
 
1906ல் ரிக்லியின் மரணத்துக்குப் பிறகு, அவருடைய சகாப்தம் மறைந்து போனது. அவருடைய மகன்களில் ஒருவர் அதை ஏற்று நடத்திய நிலையில், போர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வமின்மை காரணமாக ஸ்லோவேனியாவில் மாற்று மருத்துவத்துக்கான வரவேற்பு குறைந்துவிட்டது.
 
தண்ணீர் நல்லது. காற்று இன்னும் நல்லது. ஒளி எல்லாவற்றையும் விட சிறந்தது.
 
எவ்வளவு இருந்தாலும், ரிக்லியின் தத்துவமே திரும்ப எழுவது என்பது தான். அவருடைய மறைவுக்குப் பிறகு நூறாண்டுகளில் இயற்கை வழி சிகிச்சை முறைகள் மீண்டும் பிரபலம் அடைந்து, அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. பொதுவாகச் சொன்னால், மாற்று மருத்துவ சிகிச்சைகள் பெரிய தொழிலாகவும், ஆண்டுதோறும் வளரும் துறையாகவும் மாறியுள்ளது. 2026 ஆம் ஆண்டு வாக்கில் $210.81 பில்லியன் அளவுக்கு இதில் வருமானம் இருக்கும் என்று கிராண்ட் வியூ ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
``அவர் பரிந்துரைத்த நடைமுறைகளுக்கு ஆதரவாக அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இப்போது இருப்பதால், அவை ஏற்புடையவையாக உள்ளன. ஆனால், அந்தக் காலத்தில் அது புரட்சிகரமானதாக இருந்தது'' என்கிறார் ஜுபானிக் ஸ்லாவெக். வைட்டமின் டி உருவாதலுக்கு சூரிய வெளிச்சம் முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் இப்போது காட்டுகின்றன; தூக்கத்தின் சுழற்சியை மெலட்டினன் சீர் செய்கிறது, நல்ல ஆரோக்கியத்துக்கு சீரான தூக்கம் அவசியமாகிறது; உடல் இயக்க செயல்பாடுகளும், இயற்கையுடன் இணைந்திருப்பதும் செரோட்டோனின் சுரக்கச் செய்து மன ரீதியில் நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
 
வோஜ்கோ ஜாவோட்னிக்: ``ஒரு வகையில் அடிப்படையில் அவர் கவர்ச்சிகரமான முகாம் சேவை அளித்தார்.''
 
கடந்த சில ஆண்டுகளில், பிலெட் நகரம் தன்னுடைய இயற்கை வழி சிகிச்சை பாரம்பரியத்தை தோண்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் இருந்து விலகியிருக்க விரும்புவோருக்கு, அசத்தலான இயற்கை சூழ்ந்த பாரம்பரியம் மற்றும் கலாசாரம் மிகுந்த இடமாக அந்த நகரம் இப்போது பிரபலப்படுத்தப் படுகிறது. கடந்த ஆண்டு ரிக்லியின் வாழ்க்கையின் உந்துதலில் சாவா குரூப் ரிக்லி பேலன்ஸ் ஓட்டல் (முன்பு ஹோட்டல் கோல்ப்) நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள தங்குமிட சேவையை அளிக்கத் தொடங்கியது. உள்ளூரில் உள்ள சில அழகு மற்றும் சிகிச்சை நிலையங்கள், ரிக்லியின் சிகிச்சை முறைகளை தங்களுடைய சிகிச்சைப் பட்டியலில் சேர்த்திருப்பதாக ஜாவோட்னிக் தெரிவிக்கிறார்.
 
பிலெட் கலாசார நிலையம் பிலெட் கோட்டையில் அவருக்காக ஒற்றை அறை கண்காட்சி ஒன்றை திறந்துள்ளது. 130 மீட்டர் உயரத்தில் மலை உச்சியில் இந்த இடம் அமைந்துள்ளது. கடந்த 21 ஆண்டுகளாக ஜூலை மாதத்தில் ரிக்லி நடைபயணங்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோட்டையில் இருந்து சிறிது நேரத்தில் நடந்து செல்லக் கூடிய தொலைவில் உள்ள, கூரையில்லாத ரிக்லி வில்லா என்ற அவருடைய வீடு, அவரின் 200வது பிறந்த ஆண்டான 2023 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப் பட்டுவிடும் என்று ஜுபானிக் ஸ்லாவெக் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஹோட்டல் ரிக்லி பேலன்ஸில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், சற்று சரிவான ஸ்ட்ராஜா மலை உள்ளது. ரிக்லி பரிந்துரைத்த சாதாரண மலைகளில் ஒன்றாக அது இருந்தது. 21 ஆம் நூற்றாண்டின் மாற்றங்களைக் காட்டுவதாக அது மாறியுள்ளது. சாலை வசதிகள், சுற்றுலாப் பயணிகள் நின்று பார்ப்பதற்கான இடங்கள், பெரிய மரச் சட்டங்கள் கொண்ட புகைப்பட பூத், பொழுது போக்கு பூங்கா செயல்பாடுகள் வந்துவிட்டன. இருந்தபோதிலும், மலை உச்சியில் ரிக்லிக்கு ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. கிரானைட் கல்லில் அவருடைய உருவம் செதுக்கப் பட்டுள்ளது. நவீன வாழ்க்கை முறையில் அவர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதற்கான சிறிய அங்கீகாரமாக அது அமைந்துள்ளது.
 
ரிக்லியின் காலத்தை தோண்டி எடுக்கிறது பிலெட் ஏரி. மன அழுத்தமான வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புவோருக்கு உகந்த இடமாக இந்த இடம் கருதப் படுகிறது.
மலா ஒசோஜ்னிகாவில் உயரத்தில் இருந்து, வயல்களின் மீது காலைப் பனி எழுவதை என்னால் பார்க்க முடிகிறது. காலை சூரிய வெளிச்சத்தில் நனைந்தபடி அங்கு நான் நின்றிருந்தபோது, இதமான தென்றல் காற்று என் உடலைக் குளிர்வித்தது, 45 நிமிடம் மலைமீது நடந்து சென்றதற்கு அது இதமாக இருந்தது. இலைகள் மிதிபடும் ஓசை மட்டும் துணையாக இருக்கும் நிலையில், பசுமையான புல்வெளிகளையும் மலைப் பகுதி காடுகளையும், நீல நிற ஏரி மற்றும் ஆரஞ்சு நிற வானத்துடன் நான் பார்த்தபோது அமைதியான உணர்வு ஏற்பட்டது.
 
நான் கீழே இறங்கி வந்தபோது, நீச்சல் உடை அணிந்தவர்கள், சூரியனை முத்தமிடும் உடல்களுடன் ஏரியின் நீரில் கால்களை நனைத்துக் கொண்டிருந்தனர். இயற்கை நமக்கு அளிக்கும் சாதாரண மகிழ்ச்சிகளின் பயன்களை முழுமையாக அறிவதற்காக நான் நீண்ட தூரம் பயணம் செய்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.