வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (22:53 IST)

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இன்னொரு துல்லிய புகைப்படம் - வியப்பூட்டும் தகவல்கள்

James Webb
ஜேம்ஸ் வெப் எனப்படும் புதிய அதிநவீன தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற 'பில்லர்ஸ் ஆஃப் கிரியேஷனின்' இரண்டாவது படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' வெளியிட்டுள்ளது.
 
இந்த வாரம் MIRI(Webb's Mid-Infrared Instrument) கருவி மூலமாக செயல்பாட்டில் உள்ள நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் காட்சி நமக்கு கிடைத்தது.
 
பூமியில் இருந்து சுமார் 6,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த இடத்தை கண்காணிப்பகத்தின் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமரா கடந்த வாரம் படம்பிடித்தது.
 
மெஸ்ஸியர் 16 அல்லது ஈகிள் நெபுலா என வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் மையத்தில் இந்தத் தூண்கள் அமைந்துள்ளன.
 
இவை நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஏனெனில் வாயு மற்றும் தூசுக்களாலான நெபுலாவில் புதிய நட்சத்திரங்கள் பிறப்பதால் அதன் இயற்பியல் மற்றும் வேதியியலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் வகையில் ஒவ்வொரு நவீன தொலைநோக்கியும் அவற்றின் திசையை நோக்கி உள்ளன.
 
6.5மீட்டர் அகலமான கண்ணாடி மற்றும் உயர்தர சென்சார் கொண்ட வெப் தொலைநோக்கி, காட்சிகளைப் பதிவு செய்வதற்கான சிறந்த மற்றும் பெரிய விண்வெளி கண்காணிப்பு கருவியாகும்.
 
தூண்களைக் காட்ட பயன்படுத்தப்படும் அலைநீளங்களைத் தேர்வு செய்வதற்கான வசதி, புதிய MIRI படத்தில் உள்ள சிறப்பம்சமாகும்.
 
செவ்வாயில் பெரும் தாக்கங்களை ஆவணப்படுத்தும் நாசாவின் விண்வெளி ஆய்வு
நாசா விண்கலம் சிறுகோள் மீது மோதியதால் 10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் வழக்கமாக, வானியல் ஆராய்ச்சியாளர்கள் தூசி படித்த நெடுவரிசையை மிகவும் ஒளி ஊடுருவக் கூடியதாக மாற்ற ஒளிகளை வடிகட்டி அனுப்புவார்கள். அதன் மூலம், அதனுடைய உட்புறம் மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காண முடியும். அதைத்தான் Near Infrared Camera எனப்படும் NIRCam செய்தது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளம் நீல நட்சத்திரங்களை காண முடியும்.
 
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி MIRI படம் அதிலிருந்து ஒருபடி உயர்ந்தது. எந்த அலைநீளத்தில் தூசுக்கள் நன்கு ஒளிருமோ அந்த அலைநீளத்தை இந்தக் கருவியின் ஒளி வடிகட்டும் பகுதி தேர்வு செய்யும்.
 
நடு அகச்சிவப்பு நிலையில் தூசுக்கள் வாயிலாக இவற்றைக் காண முடியும் என்ற எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் இருக்கும் அண்மைய படம், அருகாமையிலுள்ள வெப்ப நட்சத்திரங்களின் ஒளியினால் ஒளிரும் தூசி மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைப் படிக்க இந்த முறையும் சிறந்தது எனக் காட்டும் வகையில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூத்த அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் மார்க் மெக்காக்ரியன் கூறுகிறார்.
 
பிரிட்டன் தலைமையிலான 10 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கூட்டு முயற்சியில் MIRI கருவியானது உருவாக்கப்பட்டது.
 
சூப்பர் கண்டம்: 25 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமி எப்படி இருக்கும்?
விண்வெளிப் பயணம் சென்ற முதல் அமெரிக்க பூர்வகுடிப் பெண்: தடைகளைத் தாண்டி சாதனை
பேராசிரியர் கில்லியன் ரைட் இணை முதன்மை ஆய்வாளராகச் செயல்பட்டார்.
 
"MIRI எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று பார்க்கும்போது சிலிர்ப்பாக உள்ளது. இதுவரை நம்மிடம் இல்லாத புதிய அறிவியல் தகவல்களை இது வழங்குகிறது" என பிரிட்டனின் வானியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"இந்தப் புதிய படத்தில் நாம் பார்ப்பது தூண்களின் தோல் போன்றது. நட்சத்திரங்கள் தூசியால் எரியத் தொடங்கும் இழை அமைப்புகளை நீங்கள் காணலாம். மேலும், அதில் இருக்கும் இருண்ட பகுதிகளையும் நீங்கள் காணலாம். மிகவும் அடர்த்தியாகவும் குளிராகவும் இருக்கும் அந்தப் பகுதிகள் MIRI கருவியினால் கூட ஒளிரவில்லை" என அவர் கூறினார்.
 
ஜேம்ஸ் வெப் என்பது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி முகமைகளின் கூட்டுத் திட்டமாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.