வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:56 IST)

ஆமதாபாத்தில் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சித் தருணம்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமியின் மாவட்ட கலெக்டர் ஆகும் கனவை நிறைவேற்றியிருக்கிறார் அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல்.
 
அந்த சிறுமியின் பெயர் ஃபுளோரா அசோதியா. இவர் குஜராத் காந்தி நகரில் உள்ள சர்காசனைச் சேர்ந்தவர். 'மேக் எ விஷ்'' அறக்கட்டளை மூலம் ஃபுளோராவின் கனவு குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை அறிந்த ஆட்சியர் சந்தீப் சாகேல், அந்த சிறுமியின் கனவை நனவாக்க முற்பட்டார். அதற்கான அனுமதியை பெற்ற அவர், சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களின் மகளின் கனவை நனவாக்க விரும்புவதாக கூறினார். ஃபுளோராவை அவர் விரும்பும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து ஆட்சியர் நாற்காலியில் அமர வைக்க விரும்புவதாக தெரிவித்தார்.
ஆனால், ஆட்சியர் தொடர்பு கொண்ட ஒரு வாரத்துக்கு முன்புதான் சிறுமி ஃபுளோராவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிந்தைய நாட்களில் ஃபுளோராவின் நிலைமை மோசமாக இருந்தது. அதனால் மாவட்ட ஆட்சியரின் அழைப்பை ஏற்க முடியாதவர்களாக ஃபுளோராவின் பெற்றோர் இருந்தனர்.
 
இருந்தபோதும், ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்ட பெற்றோர், பிறகு மகளை அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டனர்.
 
இதைத்தொடர்ந்து ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக ஃபுளோராவை நியமிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல், ஆட்சியரின் அலுவல்பூர்வ வாகனத்தை அனுப்பி அதில் ஃபுளோராவையும் அவரது பெற்றோரையும் அழைத்து வர ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
 
புதிய ஆட்சியருக்கு மாவட்ட நிர்வாகம் எத்தகைய வரவேற்பைக் கொடுக்குமோ அதே போன்ற சம்பிரதாய நெறிகள் கடைப்பிடிக்கப்பட்டன. காரில் வந்து இறங்கிய ஃபுளோராவுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.
 
அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டதும், ஃபுளோராவை ஆட்சியரின் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்தார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல்.
 
ஆட்சியரின் பொறுப்புகளை அவருக்கு விளக்கிய சந்தீப், குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'வாலி திக்ரி' மற்றும் 'வித்வா சஹய்' திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கான சான்றிதழ்களை ஃபுளோரா மூலம் வழங்கினார்.
 
மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மகிழ்ச்சியை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளிப்படுத்தும் விதமாக ஃபுளோராவுக்கு பார்பீ பொம்மை, டேப்லட் சாதனம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
 
ஃபுளோராவுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி பிறந்த நாள். இதையொட்டி ஒரு கேக் வரழைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அறையில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், ஃபுளோராவின் பெற்றோர் முன்னிலையில் ஃபுளோராவை கேக் வெட்டச் செய்து அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல் பேசுகையில், "ஃப்ளோரா கடந்த ஏழு மாதங்களாக மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வருவதாக அறிந்தேன். படிப்பில் நன்றாக பரிணமித்த அவருக்கு மாவட்ட கலெக்டராக வேண்டும் என்பது நெடுநாள் கனவு. ஃப்ளோராவின் விருப்பத்தைப் பற்றி 'மேக் எ விஷ்' அறக்கட்டளை எனக்குத் தெரிவித்தது. நான் அவர்களின் கோரிக்கையை ஏற்று என் அதிகாரிகளை ஃபுளோராவின் வீட்டிற்கு அனுப்பினேன். இப்போது ஃபுளோரா ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவரது கனவை நனவாக்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று கூறினார்.
 
இந்த நிகழ்வு குறித்து ஃபுளோராவின் பெற்றோர் கூறுகையில், "எங்கள் மகள் எப்போதும் படிப்பில் சிறந்து விளங்கினாள். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தாள், "என்று கூறினர்.
 
மகளின் கனவு நனவானதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தங்களுடைய உணர்வுகளை ஃபுளோராவின் பெற்றோர் பகிர்ந்து கொண்டனர்.