செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 மே 2020 (14:11 IST)

கரையை கடந்த பின்பும் அதிதீவீர புயலாகவே இருக்கும் அம்பன்!

அதிதீவிரப் புயலான உம்பான் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்கும் வங்கதேச நாட்டுக்கும் இடையே பயங்கர சேதத்தை விளைவித்தவாறு கரையை கடந்தது. 

 
குறிப்பாக, கடலோர பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழையினால் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும், வங்கதேசத்திலும் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
 
இந்த அதிதீவிர புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் முப்பது லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இருந்தபோதிலும், புயல் கரையை கடந்த இருநாட்டு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக அமலில் உள்ள பல்வேறு விதிமுறைகள் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், கோவிட்-19 பரவல் மற்றும் சமூக விலகல் உள்ளிட்டவற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்களை இடப்பெயர்வு செய்வதிலும், முகாம்களில் உள்ள முழு கொள்ளளவை பயன்படுத்துவதிலும் அதிகாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
 
1999ஆம் ஆண்டுக்கு பிறகு வங்காள விரிகுடாவில் உருவான முதல் அதிதீவிர புயலான உம்பான் கரையை கடந்துவிட்டாலும் கூட, அது இன்னமும் அதிதீவிர புயலாகவே நீடிக்கிறது.
 
"எங்கள் மதிப்பீட்டின்படி, கடலோரத்தில் இருந்து சுமார் 10-15 கிலோமீட்டர் தூரத்தில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும்" என்று கூறுகிறார் இந்தியாவின் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா.
 
மேற்கு வங்கத்தின் திகாவுக்கும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கும் இடையே, சுந்தரவனக் காட்டுக்கு அருகே நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கிய இந்த புயல், பிறகு கொல்கத்தா நகரையும் பதம்பார்த்தது.
 
சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசியவாறு கரையை கடந்த உம்பான், இன்று மேலும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து, பிறகு பூட்டானை நோக்கி செல்லும் என்று கருதப்படுகிறது.
 
இன்னும் 300 மி.மீ வரை மழை பொழியக்கூடும் என்றும் இதனால் வெள்ளம் மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.