1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:26 IST)

அமேசான் காடுகள்: 13,235 சதுர கிமீ வனம் அழிப்பு - 15 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம் இது

பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன அழிப்பு நடவடிக்கைகள் நடந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓராண்டு காலத்தில் காடழிப்பு நடவடிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் கிளாஸ்கோ நகரத்தில் நடந்து முடிந்த COP26 பருவநிலை உச்சிமாநாட்டின் போது, 2030 ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், காடழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உறுதியளித்துள்ள பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமேசான் காடுகள், சுமார் 30 லட்சம் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாகவுள்ளது. 10 லட்சம் பழங்குடியின மக்கள் அங்கு வாழ்கின்றனர். அமேசான் காடுகள் புவி வெப்பமடைதலின் வேகத்தை குறைக்கும் ஒரு முக்கிய கார்பன் உறிஞ்சும் களம்.
 
சமீபத்திய தரவுகளின்படி, 2020 - 21 காலகட்டத்தில் சுமார் 13,235 சதுர கிலோமீட்டர் வனப் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச வன அழிப்பு.
 
இந்த தரவு ஒரு "சவாலை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறினார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜோகிம் லீட். மேலும், இது போன்ற குற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கூறினார். "கடந்த சில மாதங்களின் நிலையை இத்தரவுகள் சரியாக பிரதிபலிக்கவில்லை" என்றும் கூறினார்.
 
பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஆட்சியின் கீழ் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளது. மழைக்காடுகளில் விவசாயம் செய்வதையும், சுரங்க நடவடிக்கைகளையும் அதிபர் ஊக்குவித்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
 
கடந்த 2019ஆம் ஆண்டு, காடழிப்பு விவகாரத்தில் பிரேசிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அந்நாட்டின் விண்வெளி அமைப்பான இன்பே மீது குற்றம் சாட்டி, மோதலில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சில தினங்களுக்கு முன் நிறைவடைந்த கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில், காடழிப்பு நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, வனங்களை அழிக்காமல் பாதுகாக்கும் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
 
இந்த உறுதிமொழின்படி கிட்டத்தட்ட 19.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொது மற்றும் தனியார் நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி தொகுப்பில், ஒரு பகுதி, சேதமடைந்த நிலத்தை மீட்டெடுக்கவும், காட்டுத்தீயை போன்ற பேரிடர்களை சமாளிக்கவும், பழங்குடி சமூகங்களுக்கு உதவவும் வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும்.
 
தென் அமெரிக்க செய்தியாளர் கேட்டி வாட்சனின் பகுப்பாய்வு
 
காடழிப்பு குறித்த பிரேசில் மீதான தாக்குதல்கள் 'நியாயமற்றது' என, இந்த வாரம்தான் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ முதலீட்டாளர்களிடம் கூறினார்.
 
'உண்மையான பிரேசிலை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,' என்று கூறினார், மேலும் 90% காடுகள் இன்னும் பாதுகாக்கப்படுகின்றன எனவும் கூறினார்.
 
சமீபத்தைய புள்ளி விவரம் பிரேசிலின் உண்மை நிலையை காட்டுகிறது. பிரேசில் அரசு தொடக்கத்திலிருந்தே அமேசான் காடுகள் வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் குறித்துப் பேசுகிறது, அதே நேரத்தில், சுற்றுச்சூழல் சிக்கல்களைக் குறைத்து மதிப்பிடுகிறது.
 
மேலும், இந்த புள்ளிவிவரங்கள் உண்மையில் கடந்த அக்டோபர் 27ம் தேதியன்று தயாரிக்கப்பட்டவையாகத் தெரிகிறது. தரவுகள் கிளாஸ்கோ காலநிலை மாநாடு நிறைவடையும் வரை வெளிவராமல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
சயீர் பொல்சனாரூ கிளாஸ்கோ காலநிலை மாநாட்டுக்கு வரவில்லை, ஆனால் அவரது பிரதிநிதிகள் கிளாஸ்கோவிற்குச் சென்று பிரேசிலைக் குறித்து மக்கள் தவறாக நினைக்கிறார்கள் என உலகுக்கு உணர்த்த விரும்பினர். காடழிப்பில் அதன் உருதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், 2028 ஆம் ஆண்டுக்குள் காடழிப்பு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர, தங்கள் இலக்கை அது முன்னோக்கி நகர்த்துவதாகவும் பிரேசில் பிரதிநிதிகள் கூறினர்.
 
ஆனால் காடழிப்பு குறித்து சமீபத்தைய தரவுகள் போன்ற விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது, அதிபர் சயீர் பொல்சனாரூ யார் நம்ப முடியும்?