1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (11:11 IST)

"அஜித் நான் வெளியில் கேள்விப்பட்டது போல கிடையாது" - வசுந்தராதாஸ் பேட்டி!

தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் வசுந்தரா தாஸ். 'ஷக்கலக்க பேபி', 'பூக்காரா' என இவர் பாடிய பாடல்கள் பல இன்று வரையிலுமே பல 90'ஸ் கிட்ஸ்களின் ப்ளேலிஸ்ட்டில் ஒலிக்கின்றன.
 
பாடகியாக மட்டுமில்லாமல், 'ஹே ராம்', 'சிட்டிசன்' போன்ற படங்களில் நடிகையாகவும் தனக்கான முத்திரை பதித்தவர். சமீபத்தில் 'சிட்டிசன்' படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து 'எல்லோருடைய அன்புக்கும் நன்றி' என முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் வசுந்தரா தாஸ்.
 
'சிட்டிசன்' படத்திற்காகவும், இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவும் பிபிசி தமிழுக்காக அவரை தொடர்பு கொண்டோம்.
 
'சிட்டிசன்' படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகின்றன. அந்த படம் பற்றிய நினைவுகளை பகிர முடியுமா?
 
"'சிட்டிசன்' எனக்கு மூன்றாவது படம். பாடல், நடிப்பு என இரண்டிலுமே அந்த சமயத்தில் கவனம் செலுத்தி கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் 'சிட்டிசன்' படம் எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. மக்களுக்கும் என்னை பிடித்திருந்தது. திரையில் என்னை பார்த்த போது, 'நானா இப்படி எல்லாம் நடித்தேன்' என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அஜீத்துடன் எனக்கு அந்த சமயத்தில் நல்ல நட்பு இருந்தது. நடிப்பில் முழு கவனத்துடனும், நம்மிடம் பழகும்போது பணிவுடனும் இருப்பார். அவரை பற்றி வெளியில் நிறைய செய்திகள் கேள்விப்பட்டிருப்போம். அதெற்கெல்லாம் முற்றிலும் நேர்மாறாக மிகவும் நல்ல மனிதராக இருந்தார். அதேபோல, படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொன்ன விதத்தையும், படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் அவர் உழைத்ததையும் மறக்க மாட்டேன். இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பிலும் பணிபுரிந்தேன்.
 
ஆனால், நானும் ஒரு இசைக்கலைஞன் என்ற முறையில் அந்த படத்தின் பாடல்களில் எனக்கு சில பிரச்னைகள் இருந்தன. அவை 'ஆபா' (Abba) என்ற ஸ்கேண்டிநேவியன் இசைக்குழு பாடல்களின் காப்பி. எனக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால், நம்முடைய சொந்த இசையை உருவாக்குவதற்கு நம்மிடம் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அதை நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை. அதனால், என்னுடைய பல இசைக்கச்சேரிகளில் அதை நான் பாடவில்லை. அது இசைக்கு செய்யும் துரோகமாகவே நினைப்பேன். பலரும் பாடுமாறு கேட்பார்கள். ஒரிஜினல் பாடுவதில் மட்டுமே ஒரு இசைக்கலைஞனாக எனக்கு விருப்பம் உண்டு. இருந்தாலும் 'சிட்டிசன்' படத்தின் இசையில் பணிபுரிந்தது நல்ல அனுபவம்தான்."
 
பாடகி, நடிகை என பன்முகம் கொண்டவர் நீங்கள். சினிமாவுக்குள் நுழைந்ததன் நோக்கம் என்ன?
 
"சினிமாவுக்குள் வர வேண்டும் என எந்த திட்டமிடலும் என்னிடம் அப்போது இல்லை. பாடல்கள் எழுத வேண்டும், என்னுடைய சொந்த பாடல்களை பாடி வெளியிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். நடிப்பு எதிர்பாராத விதமாகதான் வந்தது. அந்த வகையில் நிறைய மனிதர்களுடன் வேலை பார்த்தது, அவர்களிடம் இருந்து கற்று கொண்டதை பெரிய விஷயமாக கருதுகிறேன்".
 
சினிமாவில் உங்களுடைய முதல் படம் 'ஹேராம்' தானா? எப்படி அந்த படத்திற்கு தேர்வானீர்கள்?
 
"பெங்களூரு பொண்ணு நான். என்னுடைய கல்லூரி படிப்பு முடிந்ததும், இசை தொடர்பாக பணி செய்ய வேண்டும் என என்னுடைய பெற்றோரிடம் ஒரு வருடம் அனுமதி கேட்டேன். முதலில் தயங்கி, பிறகு சம்மதித்தார்கள். சென்னை பக்கம் என்பதாலும், அங்கு உறவினர்கள் இருப்பதாலும் அங்கு தங்கியிருந்தபடி பணிபுரிய சொன்னார்கள். அப்படிதான் மெட்ராஸ் வந்தேன். என் இசைப்பணிகளுக்கு ஒரு பிரபலமான இசை லேபிள் குழுவின் அலுவலகத்துக்கு சென்று என் டெமோவை வைத்து வாய்ப்பு கேட்டேன். பிறகு மாதவ்தாஸ் என்பவரை சந்தித்தேன். அங்கு நான் டெமோவில் பணிபுரிந்த பாடல்கள்தான் இசையமைப்பாளர் ரஹ்மான் அலுவலத்திற்கு சென்றன. பிறகு சந்தித்துப் பேசினோம். அங்குதான் நிறைய இயக்குநர்கள் என்னை பார்த்து நடிக்க வருமாறு அழைத்தார்கள்.
 
அப்போது என் அம்மா, அப்பாவை பார்க்க போயிருந்தேன். அம்மாவிடம் என்னை நடிக்க வைப்பதற்கு அனுமதி கேட்டு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர்களுக்கும் அது ஆச்சரியமாகதான் இருந்தது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸில் இருந்தும் அழைப்பு வந்திருந்தது. எனக்கு நடிப்பு அனுபவம் இல்லை என பெற்றோர் முதலில் தயங்கினர். ஆனாலும், இந்த வாய்ப்பு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என அவர்கள் சொன்னதால் பெற்றோர் சம்மதித்தனர்.
 
அடுத்த நாள், எனக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தார்கள். பின்பு நேரடியாக அந்த படத்திற்கு தேர்வாகி விட்டேன். நான் நடிக்க உள்ளே வந்தது, என்னுடைய குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நம்பமுடியாத ஒன்றாகதான் இருந்தது".
 
கமலுடன் நடித்த அனுபவம்?
 
"ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு அவரிடம் கற்று கொண்ட விஷயங்கள், நடித்த அனுபவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஹே ராம் படத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் அந்த அளவிற்கு நேர்த்தியாக உருவாக்கப்பட்டது. எல்லோரும் அதற்காக நிறைவான உழைப்பை தந்தார்கள். இது ஒரு 'பீரியட் படம்' என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும்போது மனநிலை அதற்கேற்ப மாறிவிடும்.
 
மூன்று நாட்களுக்கு முன்பே எனக்கு படத்தின் திரைக்கதையை எனக்கு கொடுத்து விட்டார்கள். அதை முழுவதுமாக படித்து விட்டுதான் படப்பிடிப்புக்கு சென்றேன். முதன் முறையாக கேமரா முன்னால் நின்ற போது பதற்றமாகவே இருந்தது. அதை புரிந்து கொண்டு அவர்கள் முதல் நாளில் பாடலை படமாக்கினார்கள். இதை எனக்காக செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு நன்றியும் கூட".
 
நடித்து கொண்டிருக்கும் போதே ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு எப்படி வந்தது?
 
"முன்பு என்னுடைய 'டெமோ' ரஹ்மான் அலுவலகத்திற்கு போனது என சொன்னேன் இல்லையா... அப்படிதான் 'முதல்வன்' பட வாய்ப்பு வந்தது. 'ஹேராம்' படத்தை முடித்து விட்டு 2 மாதங்கள் பிரேக்கில் இருந்தேன். அப்போது 'ஷக்கலக்க பேபி' பாடலுக்கான அழைப்பில் எனக்கு முதலில் ஒரு கேசட்டும், வாக்மேனும் கொடுத்தார்கள். அந்த இசையில் இருந்து என்னால் என்ன செய்ய முடியும் என கேட்டார்கள். ரஹ்மான் புதிய பரிசோதனை முயற்சிக்கு தயாராகவே இருந்தார். அது ஆரோக்கியமான விஷயம்.
 
அப்படிதான் அந்த பயணம் தொடங்கியது. பாட்டு வெளியானதும் ரஹ்மானுடன் இருக்கும் இந்த புதிய குரல் யார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்கள். 'ஷக்கலக்க பேபி' பாடல் மிகப்பெரிய ஹிட். எல்லோருக்கும் நான் அறிமுகமானது பாடகியாகதான். 'முதல்வன்'தான் முதலில் வெளியானது. 'ஹேராம்' பிறகுதான் வெளியானது. அந்த சமயத்தில் நான்தான் 'ஹே ராம்' படத்தின் கதாநாயகி என தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், படப்பிடிப்பு நடக்கும் போது அங்கு நிறைய பத்திரிகையாளர்கள் வருவார்கள். படத்தின் கதாநாயகி யார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. டீஷர்ட், இப்போது உள்ளது போல குறைவான முடி, மிகப்பெரிய கண்ணாடி என அங்குள்ள உதவி இயக்குநர்கள் போலவே அங்கு வலம் வந்து கொண்டிருந்தேன்.
 
படப்பிடிப்பின் போது மட்டும்தான் 'மைதிலி' ஆக மாறுவேன். பிறகு மீண்டும் டீஷர்ட்டுக்கு மாறி விடுவேன். இதனால், நான்தான் அந்த படத்தின் கதாநாயாகி என வெளியில் இருப்பவர்கள் கண்டுபிடிப்பது சிரமமாகவே இருந்தது".
 
'ஷக்கலக்க பேபி', 'ஐயோ பத்திக்குச்சு', 'மச்சக்காரி' என பெப்பி, வெஸ்டர்ன் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பாட காரணம் என்ன?

"டைப் காஸ்டிங் (Type Casting) என சொல்லப்படும் ஒரே மாதிரியான வாய்ப்புகளுக்குள் கலைஞர்களை அடைப்பது இசைத்துறையிலும் நடந்தது. அப்படிதான் எனக்கு முதல் பாடல் ஹிட் ஆனதும், அதுபோன்ற வாய்ப்புகளே மீண்டும் மீண்டும் வந்தன. உங்களுக்கு விருப்பமான பாடல்கள் கிடைக்காது. இவர்களுக்கு இதுதான் வரும் என ஒரு வட்டத்திற்குள் அடைத்து விடுவார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை. இதுவேறு தளம் என்பது எனக்கு தெரியும். அதனால், என்னுடைய சொந்த இசை, சொந்த பாடல்கள், மற்றவர்களுடன் இணைந்து பணிபுரிவது இதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்".
 
'ஹேராம்', 'சிட்டிசன்' என இரண்டு படங்கள் மட்டுமே தமிழில் நடித்தது ஏன்? நடிப்பிலும் இதுபோன்ற 'டைப் காஸ்டிங்' நடந்ததா?
 
"'ஹே ராம்' முடித்ததும் 'மான்சூன் வெட்டிங்' என ஒரு படம் நடித்தேன். படம் பாக்ஸ் ஆஃபிஸ்ஸில் வெற்றியடைந்தது. இந்த படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்து நடிகர்களுக்கும் திரைக்கதை வந்தது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் டெல்லிக்கு சென்று படத்திற்காக ஒத்திகை பார்த்து விட்டுதான் படப்பிடிப்பிற்கே சென்றோம். பிறகு 'சிட்டிசன்' படம். ஆனால், படப்பிடிப்பிற்கு முன்பே என்ன நடக்கப் போகிறது? யாருடன் என்ன வசனம் பேச போகிறேன்? என எதுவுமே எனக்கு தெரியாது. ஒத்திகை இல்லாமல் நேரடியாக படப்பிடிப்பிற்கு சென்று நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது ஒரு வித்தியாசமான அனுபவம்.
 
இந்த படம் முடித்த அடுத்த நாளே, மலையாளத்தில் 'ராவண பிரபு' படத்தில் நடிக்கச் சென்றுவிட்டேன். அந்த படமும் வெற்றி. அந்த படத்தின் கதை, என்னுடைய கதாபாத்திரம் எல்லாமே பிடித்திருந்தது. மலையாளம் தெரியாததால், என்னுடைய கதாபாத்திரத்திற்கு சரியாக ஒத்திகை பார்த்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். எல்லாமே அங்கு சரியாக இருந்தது. அது போன்ற வேலைதான் எனக்கு பிடிக்கும். ஆனால், அப்படி பெரும்பாலும் சினிமா வேலை இருக்காது என தெரியும். இதில் எனக்கு பெரிதாக உடன்பாடு இல்லாததால், அதன் பிறகு நடிப்பதற்கு பெரிதாக எனக்கு ஆர்வம் வரவில்லை".
 
நடிப்பை விட்டு விலகியது குறித்து வருத்தம் உண்டா? மீண்டும் நடிக்க வரும் எண்ணம் உண்டா?
 
"நிச்சயமாக இல்லை. கடந்த காலத்தை நான் எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஆனால், அதில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு பெரிதும் உதவின. என்னுடைய நேரத்தை எதில் நான் செலவிட வேண்டும், எதில் செலவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக உள்ளேன். அதுதான் இப்போது நான் உள்ள நிலைமைக்கு காரணம். இப்போதும் 'மீண்டும் நடிக்க வரும் எண்ணம் உண்டா?' என அழைப்புகள் வரும். எனக்கு தெரியவில்லை. நான் நடிகையாக மீண்டும் வர வேண்டும் என்றால் நிச்சயம் அந்த கதாபாத்திரம் சவாலானதாக, எனக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். இல்லையெனில், இப்போதுள்ள என்னுடைய இசை வாழ்க்கையை விட்டுவிட்டு வர முடியாது. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை என்பதே உண்மை".
 
தற்போது தமிழ் சினிமாவை கவனித்து வருகிறீர்களா?
 
"தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால், 'நாயகன்', 'ரோஜா' என இரண்டு தமிழ் படங்கள் மட்டும்தான் பார்த்திருந்தேன். தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது தெரியும். குறிப்பாக ஓடிடி நல்ல கதைகளுக்கும், சிறப்பான படங்கள் உருவாக்கத்திற்குமான களத்தை திறந்து விட்டிருக்கிறது".
 
வசுந்தரா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
 
"பிரபலமான பல பாடல்களுக்கு கான்செர்ட் செய்ய சொல்லி எனக்கு நிறைய அழைப்பு வந்தது. அதற்காகவும் சொந்த இசைக்காகவும், எங்களுடைய இசைக்குழுவுடன் நிறைய நாடுகளுக்கு பயணம் செய்தேன். அது எனக்கு மிகப்பெரிய அனுபவம். அதுதான் என்னுடைய கனவும் கூட. இசை என்பது நம்முடைய மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உதவக்கூடிய ஒன்று. இசையையும் அதன் ரிதத்தையும் எப்படி அனைவருக்கும் பயன்படுத்துவது என்ற பயிற்சிக்காக என்னுடைய கணவருடன் ஹவாய்க்கு சென்றிருந்தேன்.
 
ஏனென்றால் சிறு வயதிலிருந்தே முறையான பயிற்சி வகுப்புகளுக்கு சென்றிருந்தால் மட்டுமே அவரை 'இசை தெரிந்தவர்' என கருத நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. அதையெல்லாம் உடைத்து இசை குறித்த புரிதலையும், அது எப்படி உங்களுக்குள் நேர்மறையான எண்ணங்களை கொடுக்கிறது என்பதையும் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கம்".
 
தனி இசைக்கான புரிதல் இங்கு மக்களிடையே எந்த அளவிற்கு இருக்கிறது என நினைக்கிறீர்கள்?
 
"தனி இசையை சுற்றி பல பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளது. இப்போது தனி இசைக்காகவே நிறைய தளங்கள் வந்துள்ளன. இதனால், மக்களுக்கு அங்கு சென்று இந்த இசையை கேட்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது பற்றி தெரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால், இதில் உள்ள பிரச்னை, தனி இசை கலைஞர்களுக்கு இது போன்ற தளங்கள் முறையாக பணம் கொடுப்பதில்லை. சினிமா இசைக்கலைஞராக உங்களது இசைக்கான ஊதியம் கிடைக்கும். ஆனால், தனியிசையில் அப்படி இல்லை. இதுபோன்ற நிறைய சவால்கள் இதில் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன்.
 
மக்களிடமும் தனி இசை குறித்த புரிதலும் ஆர்வமும் அதிகமாகியிருக்கிறது. தமிழ் ராப் பாடல்கள், ஹிப் ஹாப் என வெவ்வேறான கலாசாரங்கள் ஒன்றிணைவதும் நன்றாக உள்ளது".