திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (13:20 IST)

இந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் எரிமலை வெடிப்புக்கு பிறகு ஏற்பட்ட பேரலைகளின் காரணமாக குறைந்தது 281 பேர் கொல்லப்பட்டனர் . மேலும் 1016 பேர் காயமடைந்தனர்.ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது.

சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையே உள்ள சுந்தா நீரிணையில் இந்த எரிமலை வெடிப்பு தொடர்பாக சார்டர் விமானம் ஒன்று எடுத்த காணொளி பதிவு இந்த பேரிடரின் தாக்கத்தை பதிவு செய்வதாக அமைந்துள்ளது.மீண்டும் சுனாமி ஏற்படும் அச்சத்தால் மக்களை கடற்கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை மற்றும் தேசிய பூங்காவுக்கு புகழ்பெற்ற ஜாவாவில் உள்ள பண்டெக்லாங் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.சுமத்ராவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில், பேண்ட் குழுவினர் பாடிக்கொண்டே இருக்கும் போது பெரிய அலை ஒன்று தாக்குபடியான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.



"எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது" என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.

பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

'இரு பெரும் அலைகள்'


எரிமலை வெடிப்புகளை படம் எடுக்கும், நார்வே நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆய்ஸ்டன் லண்ட் ஆண்டர்சன் இரு பெரும் அலைகள் உண்டானதாகக் கூறுகிறார்.

"நான் கடற்கரையில் தனியாக இருந்தேன். எரிமலை வெடிப்பை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது இரு பெரும் அலைகள் எழுந்தன. ஆனால், முதல் அலை அவ்வளவு வலிமையானதாக இல்லை. "

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

இந்தோனீசியாவின் பேரிடர் மேலாண்மை முகமையின் செய்திதொடர்பாளர், "முதலில் அது சுனாமி அல்ல, கடல் கொந்தளிப்பு என்றும் எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டது" என்று தெரிவித்தார்.

பிறகு நிலநடுக்கம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக அவர் மன்னிப்பு கோரினார். இதற்கிடையில் ஞாயிறன்று தவறுதலாக விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை, மக்களிடையே பெரும் பலத்த பீதியை ஏற்படுத்தியது.