புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (10:38 IST)

நடிகை மீனா: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு"

நடிகை மீனா என்றதுமே கொஞ்சும் தமிழும், குழந்தை சிரிப்பும், குறும்புத்தனமான நடிப்பும்தான் பலருக்கும் முதலில் நினைவில் வரும். 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'முத்து', 'எஜமான்', 'ரிதம்', 'அவ்வை ஷண்முகி', 'த்ரிஷ்யம்' என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
 
சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில், கதாநாயகி ஆக முப்பது வருடங்களை சமீபத்தில் நிறைவு செய்திருக்கிறார் மீனா. சினிமா பயணம் குறித்து பிபிசி தமிழுக்காக ஆனந்தப்பிரியா அவருடன் கலந்துரையாடியதில் இருந்து...
 
குழந்தை நட்சத்திரம் - கதாநாயகி என கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமா பயணம் திரும்பி பார்க்கும்போது எப்படி உள்ளது?
"திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக படங்கள் நடித்து கொண்டிருப்பதே பெரிய விஷயம்தான். இத்தனை வருட காலத்தில் சினிமாவில் எனக்கு நிறைய புது அனுபவங்கள், நல்ல மனிதர்கள் கிடைத்துள்ளார்கள். எல்லா படங்களிலும் பிடித்துதான் நடித்தேன். அதை அமைத்து தந்த என்னுடைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோ, சக நடிகர்கள் எல்லாருக்கும் நன்றி. திரும்பிப் பார்க்கும் போது சந்தோஷமாக, பெருமையாக உள்ளது".
 
சிறுவயதிலேயே நடிக்க வந்தது எப்படி? உங்களின் விருப்பம் தான் காரணமா?
 
"சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியது சிவாஜி அப்பாதான். ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்து அவருக்கு பிடித்து போனது. அப்போது அவர் நடித்த 'நெஞ்சங்கள்' படத்துடைய பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது. அந்த படத்தில் ஒரு பெரிய வீட்டு குழந்தையாக நடித்திருப்பேன். என்னை அந்த படத்தில் கடத்தி விடுவார்கள். என்னை காப்பாற்றி கொண்டு போய் அப்பா, அம்மாவிடம் சிவாஜி சார் சேர்ப்பார். என்னை சுத்தியே கதை இருப்பது போல முக்கியமான கதாபாத்திரம். அந்த வயதில் எனக்கு சினிமா என்றால் என்ன, சிவாஜி சார் எவ்வளவு பெரிய மனிதர் இது எதுவும் தெரியாது. ஆனால், வளர்ந்த பிறகு இதெல்லாம் தெரிய வந்தபோது அவரால் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன் என்பதில் எனக்கு பெருமைதான்".
 
அதன்பின் ரஜினிகாந்துடன் 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம்.. அந்த நாட்களை உங்களால் நினைவுகூர முடியுமா?
 
"ஏற்கெனவே சொன்னது போல் சிவாஜி சார், ரஜினி சார் இவங்க எல்லாருமே எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது அப்போது எனக்கு தெரியாது. ரஜினி சார் கூட முன்னாடி, 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் நடிச்சிருக்கேன். அதனால், 'அன்புள்ள ரஜினிகாந்த்' படம் நடிக்கும்போது புதிதாக எனக்கு தெரியவில்லை. அந்த படத்தில் என் வயதை ஒத்த நிறைய குழந்தைகள் நடித்திருப்பார்கள். அம்மாவும் ரஜினி சாரும் அப்போ பேசிப்பாங்க. நான் படப்பிடிப்பு இடைவெளியில் பள்ளி பாடங்கள் படிப்பேன்.
 
சினிமா எவ்வளவு பெரிய விஷயம் என்பது எல்லாம் நான் வளர்ந்த பிறகுதான் தெரிஞ்சது. குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்திருந்தாலும் பிறகு கதாநாயகியாக நான் நடிக்க எந்த எண்ணமும் எனக்கோ என்னுடைய குடும்பத்திற்கோ இல்லை. ஆனால், கொஞ்ச வருஷம் கழித்து 'குழந்தை இப்போ என்ன பண்ணறாங்க? வளர்ந்துட்டாங்களா?' என நிறைய பேர் கேட்டார்கள். 'சரி, ஒரு படம் நடிப்போம்' என 'நவயுகம்' படத்தில் நடித்தேன். அந்த படம் நடிக்கும் போதே தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்கள் வந்தன".
 
தமிழ் சினிமாவில் பிரதான நாயகியாக நீங்கள் நடித்து ஹிட் ஆன 'என் ராசாவின் மனசிலே' வெளி வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 'சோலையம்மா' கதாபாத்திரம் உங்கள் சினிமா பயணத்தில் எந்த அளவுக்கு முக்கியமானது?
 
"கஸ்தூரி ராஜா சார் என்னுடைய அம்மாவை சந்தித்து இந்த கதையை சொன்னார். ரொம்பவே அப்பாவியான, புருஷனுக்கு பயப்படக்கூடிய ஒரு பொண்ணு என கதை பிடித்து போய் நடிக்க ஒத்து கொண்டேன். 'என் ராசாவின் மனசிலே' படத்தில் 'சோலையம்மா' கதாபாத்திரத்தில் நடித்த போது நான் ரொம்ப சின்ன பொண்ணு. அந்த கதாபாத்திரத்தில் நான் கர்ப்பிணி ஆக வருவேன். அந்த வயதில் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி கொள்ளும் அளவுக்கு எனக்கு அனுபவம் அப்போது இல்லை. அதுமட்டுமில்லாமல், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்த மக்கள் எல்லாருமே நான் நிஜமான கர்ப்பிணி என நினைத்து என்னிடம் அக்கறையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.
 
ஆரம்பத்தில் இருந்து, கதையில் எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவே நினைப்பேன். அதுக்கேற்றாற் போல 'சோலையம்மா' கதாப்பாத்திரம் கிடைத்ததில் சந்தோஷம்".
 
ராஜ்கிரணுடன் நடித்த அனுபவம்?
 
"படப்பிடிப்புக்கு போகும் வரை யார் ஹீரோ என எனக்கு தெரியாது. அதுக்கு பிறகுதான், படத்தின் தயாரிப்பாளரே ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொன்னார்கள். இரண்டாவது நாள்தான் ராஜ்கிரண் சாரை சந்தித்தேன். ரொம்ப நல்ல மனிதர். அவருடைய கேரக்டருக்கும் தோற்றத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ரொம்ப அமைதியானவர். எல்லோரும் நல்லாயிருக்கனும், நல்லா சாப்பிடனும் என ரொம்ப அக்கறையாக கவனிப்பார்".
 
சுவர்ணலதா குரல், இளையராஜா இசை என குயில் பாட்டு மிகப்பெரிய ஹிட் ஆனது. அது உங்களுக்கு எந்த அளவுக்கு ஸ்பெஷல்?
 
"நான் மிகப்பெரிய இளையராஜா ரசிகை. அவருடைய இசையில் படத்துடைய பாடல்கள் எல்லாமே ஹிட். குறிப்பாக சோலையம்மாவுக்கான 'குயில் பாட்டு' பாடல் படமாக்கும் போது மொத்த யூனிட்டுமே கலகலப்பாகிட்டாங்க. ஏன்னா, படம் முழுக்க அழுதுட்டு, மிரட்டிட்டு அந்த மாதிரியான ஒரு தாக்கத்திலேயே இருந்தது. அப்படி இருக்கும் போது இந்த பாட்டு வரும்போது கேமராமேன், நடிகர்கள் என எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. என்னுடைய முதல் ஹிட் பாடலும் அது".
 
நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு சவாலான கதாப்பாத்திரங்கள் எவை?
 
"சோலையம்மா கதாபாத்திரம். அதுதவிர, 'செங்கோட்டை' படத்தில் பிராமிண் பெண் கதாப்பாத்திரம். கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகக்கூடிய கதாபாத்திரம். தீவிரமான அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். அதேபோல், 'ரிதம்' படத்துடைய சித்ரா கதாபாத்திரம். ரொம்பவே அழுத்தமான உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத அதேநேரம் சரியாக அதை வெளிப்படுத்த வேண்டியதாக இருந்தது. பாக்யராஜ் சார் கூட நடித்த 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' படம் ரொம்ப பிடித்து நடித்தேன். பாக்யராஜ் சார் கூட நடிக்கும்போது பயங்கரமா சிரிச்சுட்டே இருப்பேன். 'நாம் இருவர் நமக்கு இருவர்' படத்துல சுந்தர்.சி கூட வேலை பார்த்ததும் நல்ல அனுபவம்.
 
'அவ்வை சண்முகி' படத்தில் கமல் சார் கூட நடிச்சதும் மறக்க முடியாதது. கே.எஸ். ரவிக்குமார் சார் கதை சொன்னதும் பிடிச்சிருந்தது. அப்போது கமல் சார் படங்களில் முத்தக்காட்சி என்பது வழக்கமாக இருக்கக் கூடிய ஒன்று. ஆனால், அது குறித்து அப்போது நான் யோசிக்கவே இல்லை. இந்த விஷயம் தெரிய வந்தபோது எனக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. ஏன்னா, இந்த மாதிரி காட்சிகள் பண்ண அப்போது நான் தயாராகவே இல்லை. இதைப்பத்தி இயக்குநரிடம் பேசலாம் என போனபோது அங்கே கமல் சாரும் இருந்தார். எனக்கு இன்னும் பதற்றம் அதிகமாகி விட்டது. பிறகு அந்த காட்சி வரும்போது, 'அடுத்த முறை பார்த்துக்கலாம்' என்பது போல முடியும்.
 
அந்த மாதிரி காட்சிகள் எடுக்கக்கூடாது, தப்பு என்று சொல்லவில்லை. ஆனால், அதுக்கு நான் தயாராக இல்லாதபோது அந்த காட்சி வந்ததால் பதற்றமாகி விட்டேன். என்னுடைய தொழில் வாழ்க்கையில் அந்த மாதிரி காட்சிகளை இதுவரை பண்ண வேண்டிய சூழல் அமையவில்லை என்பதில் ஒரு சின்ன சந்தோஷம்".
 
வில்லன், ஆனந்தப்பூங்காற்றே, சிட்டிசன் என அஜித் உடன் கதாநாயகியாக நடித்துள்ளீர்கள். ஆனால், விஜய் உடன் நடிக்காதது ஏன்?
 
"'சிட்டிசன்' படம் பொருத்தவரைக்கும் என்னுடைய பகுதிதான் கதைக்கு முக்கியமானது. அஜித் உடன் நடித்தது நல்ல அனுபவம். ஆனால், விஜய் உடன் படங்கள் நடிக்க வாய்ப்பு வந்த போது மற்ற படங்கள் நடித்து கொண்டு இருந்ததால் அப்போது அவர்கள் கேட்ட நாட்களை ஒதுக்க முடியவில்லை. 'ப்ரியமுடன்', 'ப்ரண்ட்ஸ்' படங்கள் எனக்குதான் வந்தது. ஏன்னா, மலையாளத்துல ஒரிஜினல் கதையில் நான்தான் நடித்திருப்பேன். அதுக்கு பிறகுதான் 'ஷாஜகான்' படத்தில் ஒரு பாடலுக்காக கேட்டார்கள்.
 
முதலில் தயக்கமாகவே இருந்தது. ஆனால், எனக்கு தெரிந்த பலரும் பண்ண சொல்லி கேட்டார்கள். 'படத்தில்தான் சேர்ந்து நடிக்க முடியலை. இந்த வாய்ப்பையும் தவற விட வேண்டாமே' என ஒத்துக்கிட்டேன். அப்போது எல்லாம் கதாநயாகிகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது வழக்கம் இல்லை. நானும், சிம்ரனும்தான் இந்த வழக்கத்தை தொடங்கி வைத்தோம்".
 
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க எதுவும் தயக்கம் இருந்ததா?
 
"சினிமாவுடனேயே கடைசி வரை வாழ முடியாது இல்லையா? என்னுடைய குடும்ப வாழ்க்கையும் எனக்கு முக்கியம். அதனால், சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எனக்கு தேவையாக இருந்தது. இதைவெளி எடுத்துக் கொண்ட பிறகு சினிமாவில் நான் எப்படி இருப்பேன் என பெரிதாக யோசிக்கவில்லை. அந்த நேரத்தில் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால், பிறகு அவர்களுக்கு நடிக்க வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் அக்கா, அண்ணி அப்படிதான் இருக்கும். ஆனால், கதாநாயகியாக நடித்து விட்டு அந்த கதாபாத்திரங்கள் நடிக்க நான் தயாராக இல்லை. முக்கியமான கதாபாத்திரம் வந்தால் நடிக்கலாம் என்ற எண்ணம்தான் இருந்தது"
 
அப்போது வந்த படம்தான் 'த்ரிஷ்யம்' இல்லையா?
 
"ஆமாம். கதை பிடித்தது. ஆனால், குடும்பத்தை விட்டு மறுபடியும் படப்பிடிப்புக்கு போக தயக்கம் இருந்தது. ஆனால், அது குறித்து கவலைப்பட விடாமல் என்னுடைய குடும்பமும் படப்பிடிப்புக்கு வந்தார்கள். படக்குழுவும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அப்போது இந்த படம் இந்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகி பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் என நினைக்கவில்லை".
 
'த்ரிஷ்யம்' படத்துடைய மலையாளம், தெலுங்கு என இரண்டிலும் நீங்கதான் ராணி ஜார்ஜ். அப்படி இருக்கும் போது, தமிழில் 'பாபநாசம்' வாய்ப்பு வரவில்லை என வருத்தம் உள்ளதா?
 
"தமிழில் அந்த கதாபாத்திரத்திற்கு என்னை அணுகவில்லை. ஒருவேளை வாய்ப்பு வந்திருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன். ஆனால், எனக்குதான் வரும் என நான் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் வைக்கவில்லை. அதனால் என்ன, ஒரிஜினல் படமே நான்தான் பண்ணியிருக்கேன் (சிரிக்கிறார்)".
 
சினிமா பயணம் குறித்து பேசும் போது குழந்தை நட்சத்திரம், கதாநாயகி, இப்போது 'அண்ணாத்த' என வெவ்வேறு காலகட்டங்களில் ரஜினிகாந்துடன் நீங்கள் நடித்துள்ள அனுபவம் குறித்து விவரிக்க முடியுமா?
 
"உண்மையிலேயே இதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ரொம்ப நாள் கழித்து மீண்டும் ரஜினி சாருடன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் நன்றாக நடிப்பதற்காக எதாவது சொல்லி போட்டிக்கு தயார்படுத்துவது போல எங்களை வம்பிழுத்து கொண்டு இருப்பார். 'அண்ணாத்த' படப்பிடிப்பில் குஷ்பு, நான், ரஜினி சார் என யூனிட்டே கலகலப்பாக, திருவிழா போல இருந்தது"
 
தமிழில் 2011ல் 'தம்பிக்கோட்டை' படத்தில் நடித்தீர்கள். பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடைய 'அண்ணாத்த' படத்தில். எதனால் இந்த நீண்ட இடைவெளி?
 
"திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடிக்க வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. குடும்பமும் எனக்கு முக்கியமாக இருந்தது. என்னுடைய குழந்தை, குடும்பம் இதெல்லாம் விட்டுவிட்டு நேரம் கொடுப்பதற்கு நல்ல கதை, என்னுடைய கதாப்பாத்திரம் இதெல்லாம் பிடித்து இருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற படங்கள் குறைவாகவே வந்தது. அதுதான் இடைவெளிக்கு காரணம்".
 
சினிமா பயணத்தில் உங்கள் குடும்பத்துடைய பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது?
 
"என்னுடைய அம்மாதான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அவர்களால்தான் இந்த அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன். இத்தனை வருட சினிமா தொழில் வாழ்க்கையில் என்னுடைய படங்கள், ஈடுபாடு, இது குறித்து எல்லாம் யாரும் என் மேல் குறை சொல்லியதே கிடையாது. இதற்கெல்லாம் காரணம் அம்மாதான். அவங்கதான் எல்லாமே சரியாக பார்த்து, எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது".
 
மீனாவின் 30 ஆண்டு கதாநாயகிஅனுபவத்தை வைத்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
 
"செய்யும் வேலைக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும். இன்னைக்கு இல்லைன்னாலும் நாளைக்கு அது நிச்சயம் பேசப்படும். உழைப்புதான் எல்லாமே"
 
தற்போதுள்ள நடிகைகளில் பிடித்தவர்கள் யார்?
 
"எல்லாருமே பிடிக்குமே. குறிப்பாக கேட்டால் சமந்தா, நயன்தாரா இவர்களை சொல்லுவேன்".
 
சினிமாவில் அடுத்து?
 
"எந்த ஒரு திட்டமும் இல்லை. அதுவும் இந்த சூழலில் எல்லாருமே பாதுகாப்பாக இருப்பது மட்டுமே முக்கியம். எது நடந்தாலும் நம்பிக்கையோட இருங்க. இதுவும் கடந்து போகும்".