1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (11:17 IST)

38 ஆண்டுகால போதைப் பழக்கத்தை 36 நாட்களில் கைவிட்டவர்: நம்பிக்கை மனிதரின் கதை!

இன்று(ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம். நீண்ட காலப் போதைப் பழக்கத்தை கைவிட ஒருவர் எடுத்துக் கொண்ட முயற்சி பற்றியது இந்தக் கட்டுரை.
 
ஹெரோயின் போதைப் பொருள், இலங்கைக்கு அறிமுகமான 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதைப் பயன்படுத்தத் தொடங்கியவர் ஜெயம். அப்போது அவருக்கு 23 வயது. அதற்கு முன்பாக பாடசாலைக் காலத்தில் 14 வயதிலேயே மதுபானம் குடிக்கத் தொடங்கிவிட்டார்.
 
இந்தப் பழக்கம் அவரது 52 வயது வரை நீடித்தது. இதன் காரணமாக பல்வேறு துன்பங்களை அவர் அனுபவித்தார். குறிப்பாகத் தனது கௌரவத்தை 'போதைப் பழக்கம்' இல்லாமல் ஆக்கிவிட்டதாக அவர் இன்றும் வருந்துகிறார்.
 
இப்போது 63 வயதாகும் ஜெயம், போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு விட்டார். 2012ஆம் ஆண்டு, அவரது மனைவியுடைய பெரும் முயற்சியால், புனர்வாழ்வு இல்லமொன்றில் சேர்க்கப்பட்ட ஜெயம், வெறும் 36 நாட்களுக்குள் அவரது 38 ஆண்டு கால போதைப் பழக்கத்தைக் கைவிட்டார். அதற்குப் பிறகு "விளையாட்டுக்குக் கூட நான் குடித்ததில்லை" என்கிறார் அவர்.
 
ஜெயம் தனது போதைப் பழக்கத்தின் காரணமாக திருடும் நிலைக்குக்கூட சென்றதாகவும் அதனால், தனது குடும்பம் பல முறை அவமானத்தை எதிர்கொண்டதாகவும் கூறுகிறார்.
 
 
ஹெராயின் போதைப் பழக்கம் எப்படி ஏற்பட்டது?
ஜெயம் மாத்தளையில் பிறந்தவர். அவரது இளமைக்காலத்தில் அவருடைய குடும்பம் கொழும்புக்கு குடியேறியது.
 
"களியாட்டங்களின்போது, வேலை நேரம் முடிந்த பிறகு என்று குடித்துக் கொண்டிருந்த நான், முழு நாள் குடிகாரன் ஆனேன். ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையும் ஆனேன்".
 
"அந்த நிலையில்தான் 1983ஆம் ஆண்டு ஹெரோயின் இலங்கைக்கு அறிமுகமான காலப்பகுதியில், பெரிய ஹோட்டல்களில் வேலை செய்த எனது நண்பர்கள் மூலமாக 'அது' எனக்குக் கிடைத்தது. ஆகையால் குடிப்பழக்கத்திலிருந்து ஹெரோயினுக்கு மாறினேன்," என்கிறார்.
 
மதுவைவிடவும் ஹெரோயினுக்கு அதிக பணம் தேவைப்பட்டதால், அவரது வாழ்க்கை இன்னும் நெருக்கடிக்குள்ளானது.
 
ஹெரோயின் பாவிக்கத் தொடங்கிய பிறகு, எனது தொழில், கௌரவம் எல்லாவற்றையும் இழக்கத் தொடங்கினேன். கையில் காசு இல்லாதபோது ஹெரோயின் வாங்குவதற்காக நண்பர்களிடம் கடன் கேட்டேன், அதற்காகப் பொய் கூறினேன். வீட்டில் பணம், நகை, பெறுமதியான பொருட்கள் எனப் பலவற்றையும் திருடினேன். ஒரு கட்டத்தில் வேறு இடங்களிலும் திருடும் நிலைக்கு ஆளானேன்,” என்றார்.
 
இப்படி ஹொரோயின் பழக்கம் சுமார் அவரிடம் ஐந்து ஆண்டுகள் நீடித்தது.
 
"ஆரம்பத்தில் ஹெரோயின் போதைப்பழக்கம், ஒருவகையில் மகிழ்ச்சியானதாக இருந்தது. வேறோர் உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது. அதேவேளையில் போதை நிலையில் யாருடனும் பேச முடியாது என்பதால், போதைப் பழக்கம் என்னைத் தனிமைப்படுத்தியது".
"ஹேரோயின் பழக்கத்தால் உடலில் இருந்த நோய்கள் அனைத்தும் அதிகரித்தன. கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டது. உடல் கடுமையாக பலவீனமடைந்தது. யாருடனும் பேசுதவற்கான மனநிலை இல்லாமல் போனது. உடலில் ஊசி குத்துவதைப் போன்ற வலியும் தொடர்ச்சியாக இருந்தது. மனம் ஒருவித பதற்றத்திற்கு உள்ளேயே உழன்றது," என ஹேரோயின் பழக்கம் தனக்குள் ஏற்படுத்திய கெடுதிகளை ஜெயம் விவரித்தார்.
 
ஹெரோயின் பழக்கம் தனது உடல் மற்றும் மனதளவில் ஏற்படுத்திய உபாதைகளிலிருந்து தற்காலிக 'விடுதலை' பெறுவதற்காக என்று, ஹெரோயினை மேன்மேலும் அதிகமாகப் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
 
போதைப் பொருள் பழக்கத்தால் வெறுத்து ஒதுக்கிய குடும்பம்
போதைப்பொருள் பயன்பாடு, மிக மோசமான விளைவுகளைத் தனக்குள் ஏற்படுத்தியதை உணர்ந்த ஜெயம், அதிலிருந்து விடுபட வேண்டும் என முடிவு செய்தார். தான் அப்போது வாழ்ந்த சூழலில் இருந்துகொண்டு அதைச் சாதிப்பது கடினம் என அவருக்குப் புரிந்தது. அதனால், அவருடைய வீட்டுக்குக்கூட தெரியாமல், கொழும்பிலிருந்து தனக்கு எந்தத் தொடர்புகளுமற்ற மட்டக்களப்புக்கு 1987ஆம் ஆண்டு ஜெயம் புறப்பட்டார்.
 
"போதையால் ஏற்பட்ட சில கெட்ட பழக்கங்கங்கள் காரணமாக போலீசாரால் சில முறை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டேன். அப்பா, அண்ணனின் நண்பர்களிடம் கடன் வாங்கியிருந்தேன். அதனால் வீட்டார் என்னுடன் மிகவும் வெறுப்பான மனநிலையில் அப்போது இருந்தார்கள்," என்று வாழ்வின் மோசமான அந்தப் பழைய நினைவுகளை மீட்டேடுத்துக் கூறினார்.
 
“மட்டக்களப்பில் ஒரு ஹோட்டலில் 'பில்' எழுதுபவராக வேலைக்குச் சேர்ந்தேன். சாப்பாடு மற்றும் தங்குமிடம் அங்குதான் கிடைத்தன. ஆனாலும் ஒரு கட்டத்தில் நான் அநாதரவாக உணர்ந்தேன். அந்தக் காலத்தில்தான் எனது மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் ஒருவரையொருவர் விரும்பினோம். எனது வீட்டுச் சம்மதமின்றி எங்கள் திருமணம் நடந்தது.”
 
ஹெராயின் பழக்கத்தை நிறுத்த முயன்று குடிக்கு அடிமையான ஜெயம்
 
ஹெரோயின் பழக்கத்தைத் திடீரென நிறுத்தியதைத் தொடர்ந்து, அதற்கு அடுத்து வந்த நாட்களில், உடல் மற்றும் உளவியல்ரீதியாக மிக அதிகமான சிரமங்களை அனுபவித்ததாக ஜெயம் கூறினார்.
 
"தூக்கமின்மை, பசியின்மை, அதிக கோபம் போன்றவை ஏற்பட்டன. அதற்குப் பரிகாரமாக ஒரு நாளில் மூன்று, நான்கு தடவை குளித்தேன். மூன்று நாட்கள் கடந்தபோது அந்த உபாதைகள் ஓரளவு தணிந்தன," என்றார்.
மட்டக்களப்புக்கு வந்து ஹெரோயின் பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் மீண்டும் குடிக்கத் தொடங்கியதாக அவர் கூறினார். "அதைத் தவிர்க்க முடியவில்லை. திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் குடி நோயாளியாகி விட்டேன்."
 
"எனக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள். அவர்கள் வளர்ந்த பிறகும் குடித்துக்கொண்டு மற்றவர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு வீதிகளில் திரிந்து கொண்டிருந்தேன். வீட்டைக் கவனிப்பதில்லை. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால் எனது மனைவி என்னைக் கைவிடவில்லை."
 
வாழ்வில் மனைவியால் ஏற்பட்ட திருப்புமுனை
”2012ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் எனது வாழ்க்கையில் அந்த மாற்றம் நடந்தது. வீட்டுக்குகூட போகாமல் வீதிகளில் சுற்றித் திரிந்த என்னை, போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் மட்டக்களப்பிலுள்ள இல்லம் ஒன்றுக்கு எனது மனைவி அழைத்துச் சென்றார்.
 
ஆனால் 'புனர்வாழ்வு இல்லத்துக்குப் போகிறோம்' என்று எனது மனைவி கூறவில்லை. 'நாம் நிறுவனம் ஒன்றுக்குப் போகிறோம், அங்கு நல்ல வேலைகள் உள்ளன, நல்ல சம்பளம் கிடைக்கும், வாருங்கள் சென்று பார்ப்போம்' என்றுதான் என்னைக் கூட்டிச் சென்றார். நானும், 'அங்கு சென்றால் ஏதாவது பணம் கிடைக்கும் அதை வைத்துக் குடிக்கலாம்' என்கிற எண்ணத்தில்தான் போனேன்,” என்றார்.
 
அங்கு சென்ற பிறகுதான், அது போதைப் பழக்கமுள்ளோருக்கு புனர்வாழ்வளிக்கும் ஓர் இல்லம் என்பதை ஜெயம் அறிந்துகொண்டார். அங்கிருந்து எப்படியும் வெளியேறி விடவேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது.
 
“அங்கிருந்து நாளை தப்பித்துச் செல்லலாம், நாளை மறுநாள் தப்பித்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்."
 
இப்படி மூன்று நாட்கள் கழிந்த நிலையில் தனக்குள் மாற்றமொன்று உருவாகத் தொடங்கியதை ஜெயம் உணர்ந்தார்.
 
"அங்கு என்னைப்போல் பலர் இருந்தனர். எங்களுக்கு தியான முறைகள், உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இவற்றின் காரணமாக சிறிது சிறிதாக என்னுள் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
 
குறிப்பாக, கடவுள் மீதான அன்பும், ஆன்மீக ஈடுபாடும் எனக்குள் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் 'குடி இல்லாமல் இருக்க முடியும்' எனும் மனநிலை ஏற்பட்டது. குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக எந்தவித மருந்துகளும் அங்கு வழங்கப்படவில்லை."
 
"அந்த நாட்களில் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. 'நான் யார்? நான் எப்படி இருக்க வேண்டியவன்? இப்போது எப்படி இருக்கிறேன்?' என நினைத்துப் பார்த்தேன். கௌரவமான ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த நான், இப்போது இவ்வாறான நிலைக்கு வந்துள்ளமைக்கு காரணம் என்ன என்று யோசித்தேன். போதையால்தான் இந்த இழிவு வந்தது என்கிற தெளிவு என்னுள் ஏற்பட்டது. அதுவே எனது வாழ்வில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது," என ஜெயம் கூறினார்.
 
அந்த இல்லத்தில் நிறைய வாசித்ததாகவும் கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.
 
அங்கு 36 நாட்களில் வழங்கப்பட்ட புனர்வாழ்வுக்குப் பிறகு, 'வேறொரு' நபராக ஜெயம் வீடு திரும்பினார்.
 
”நான் புனர்வாழ்வு இல்லத்திலிருந்து திரும்பியபோதும், என்னை யாரும் நம்பவில்லை. நான் மீண்டும் குடித்து விடுவேனோ என்கிற பயம் எனது மனைவிக்கும் இருந்தது. அதை பரீட்சித்துப் பார்ப்பதற்காக பல முறை எனது கண்ணில் படும்படி பணத்தை வைத்து விட்டுச் செல்வார்.
 
நான் அதை எடுத்துக் கொண்டுபோய் குடிக்கிறேனா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கே அவர் அப்படிச் செய்ததாகப் பிறகு தெரிந்துகொண்டேன். ஆனால், நான் புனர்வாழ்வு இல்லத்துக்குப் போய் வந்த பிறகு, இதுவரை விளையாட்டுக்குக்கூட குடிக்கவில்லை," என்று மகிழ்வுடன் அவர் கூறுகின்றார்.
 
புனர்வாழ்வு இல்லத்திலிருந்து வீடு திரும்பியபோது, தன்னிடம் ஒரு சதம்கூட பணம் இருக்கவில்லை என, அந்த நாட்களை ஜெயம் நினைவுபடுத்தினார்.
 
"அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ஆனால் நிறைய நம்பிக்கை இருந்தது. ஆரம்பக்கட்டமாக ஓடாவி (தச்சர்) ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அதில் சிறியதொரு தொகை வருமானமாகக் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன்," என்று கூறும் ஜெயம், இப்போது தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகின்றார்.
 
போதைப்பொருள் பயன்பாட்டால் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு மரணம்
 
இலங்கை நிலவரப்படி, மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 மில்லியன் பேர் மதுசாரம் பாவிப்பவர்களாகவும் 2.5 மில்லியன் பேர் புகையிலை பாவிப்பவர்களாகவும் உள்ளனர் என்று 2019ஆம் ஆண்டு இறுதியாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கை கூறுவதாக, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் கூறுகின்றார்.
 
ஆயினும் கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.6 மில்லியனாக குறைந்துள்ளதாக கணிப்பீட்டு அறிக்கையொன்று வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக இலங்கையில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு மரணம் ஏற்படுவதாகவும் றஸாட் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, இலங்கையில் சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனையாளர்கள் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர் என, 2019ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், கோவிட் காலத்திற்குப் பிறகு இந்தத் தொகை அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
"சட்டவிரோதமான போதைப்பொருள்களில் கஞ்சா பயன்பாடே அதிகமாக உள்ளது. 5 லட்சத்து 30 ஆயிரம் சட்டவிரோத போதைப் பொருள் பாவனையாளர்களில் 53 சதவீதமானோர் கஞ்சா நுகர்கின்றனர்” என றஸாட் குறிப்பிட்டார். ஹெராயின் பாவனையாளர்கள் 98 ஆயிரம் பேர் உள்ளனர்.
 
சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஒன்றுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
 
போதைப் பொருள் பழக்கத்தில் இருந்துவிடுபட உதவும் சட்டம்
 
இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பாவிப்போருக்கு சிகிச்சையளிப்பதற்கென 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க 'போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்' எனும் சட்டமொன்று உள்ளது. இதன் அடிப்படையில் போதைப் பொருள் பாவனையாளர்களை அவர்களது விருப்பத்துடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப முடியும்.
 
தமது விருப்பத்துடன் முன்வருவோருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக இலங்கையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கீழ் 4 சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளன.
 
இவை தவிர 10 சிறைச்சாலைகளில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உளவியல் ஆலோசகர்கள், போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டோருக்குத் தமது சேவைகளை வழங்குகின்றனர்.
 
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரைக் கட்டாயத்தின் பேரில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றுக்கு அனுப்புவதாயின், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர், சம்பந்தப்பட்ட நபரை புனர்வாழ்வு நிலையம் ஒன்றுக்கு அனுப்புமாறு காவல் நிலையமொன்றில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
 
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் போதைப்பொருள் பாவனையாளரை போலீசார் கைது செய்து, வைத்திய அதிகாரியிடம் கொண்டு சென்று, அவர் போதைப்பொருள் பயன்படுகின்றவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற வேண்டும். பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்ப முடியும்.
 
இவ்வாறு கட்டாயத்தின்பேரில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், கந்தக்காடு பிரதேசத்திலுத்திலுள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களுக்கு மொத்தமாக ஓராண்டுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். முதல் 6 மாதங்கள் கந்தக்காடு முகாமிலும், அடுத்த 6 மாதங்கள் சேனபுர முகாமிலும் புனர்வாழ்வு வழங்கப்படும்.
 
அங்கிருந்து அவர்கள் வெளியேறிய பிறகும், அதிகாரிகள் ஊடாக கண்காணிக்கப்படுவார்கள் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் றஸாட் தெரிவிக்கின்றார்.