வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (18:44 IST)

20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கால உயிரினம் கண்டுபிடிப்பு - எங்கே வாழ்கிறது?

சர் டேவிட் அட்டன்பரோ பெயரிலான பழங்கால முட்டையிடும் பாலூட்டியை விஞ்ஞானிகள் முதல்முறையாகப் படம் பிடித்துள்ளனர். இதன்மூலம் அந்த உயிரினம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.
 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இந்தோனீசியாவில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில், அட்டன்பரோவின் பெயரைக் கொண்ட நீண்ட மூக்கு எகிட்னாவின் நான்கு மூன்று விநாடி காணொளிகள் பதிவு செய்யப்பட்டன.
 
முள்ளந்தண்டு, ரோமத்துடன் கூடிய, அலகு கொண்ட எகிட்னாக்கள் "உயிருள்ள தொல்லுயிர்" என்று அழைக்கப்படுகின்றன.
 
டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அவை தோன்றியதாகக் கருதப்படுகிறது.
 
இந்தக் குறிப்பிட்ட இனமான Zaglossus attenboroughi இருந்ததற்கான ஒரே ஆதாரம் பல தசாப்தங்களுக்கு முந்தைய அருங்காட்சியக மாதிரி மட்டுமே.
 
"எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருந்தது" என்று கேமரா ட்ராப் காட்சிகளில் அட்டன்பரோ எகிட்னாவை கண்டறிந்த தருணத்தைப் பற்றி பிபிசி செய்திகளிடம் டாக்டர் ஜேம்ஸ் கெம்டன் கூறினார்.
 
"எங்கள் கடைசி கேமராவிலிருந்து சேகரிக்கப்பட்ட கடைசி மெமரி கார்டில், எங்கள் பயணத்தின் கடைசி நாளில் நாங்கள் பார்த்த கடைசி மெமரி கார்டில் இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன," என்று அவர் கூறினார்.
 
 
20 கோடி ஆண்டுகளுக்கு முன், தோன்றியதாகக் கருதப்படும் எகிட்னா என்ற இந்த உயிரினம் இன்னமும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 
டாக்டர் கெம்டன் இந்த மறுகண்டுபிடிப்பு பற்றி டர் டேவிட் அட்டன்பரோ உடன் கடிதத் தொடர்பில் இருந்ததாகவும், அவர் "முற்றிலும் மகிழ்ச்சி அடைந்ததாகவும்" கூறினார்.
 
கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் (6,561 அடி) உயரத்தில் உள்ள பசுமையான மழைக்காடு வாழ்விடமான சைக்ளப்ஸ் மலைகளை ஆராய்வதற்காக ஒரு குழு சென்றது.
 
இதுவரை ஆராயப்படாத பகுதிகளை ஒரு மாத காலம் ஆராய்ந்த அந்த பன்னாட்டு குழுவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளரான டாக்டர் கெம்டன், தலைமை தாங்கினார்.
 
அட்டன்பரோவின் "மறைந்துபோன எகிட்னா"வை கண்டுபிடித்ததோடு, இந்தப் பயணத்தில் புதிய வகையான பூச்சிகள் மற்றும் தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மர கங்காரு மற்றும் 'சொர்க்கத்துப் பறவைகளின்' ஆரோக்கியமான இனப்பெருக்கம் கவனிக்கப்பட்டது.
 
வாத்து மூக்குள்ள பிளாட்டிபஸ் தவிர, எகிட்னா மட்டுமே முட்டையிடும் பாலூட்டியாகும். நான்கு எகிட்னா இனங்களில் மூன்றுக்கு நீண்ட அலகுகள் உள்ளன, அட்டன்பரோ எகிட்னா மற்றும் மேற்கத்திய எகிட்னா ஆகியவை அழிவதற்குக் கடுமையான வாய்ப்புள்ள இனங்களாகக் கருதப்படுகின்றன.
 
சைக்ளப்ஸ் மலைகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், தரையில் அலகினால் குத்தப்பட்டதற்கான தடங்கள் உள்ளிட்ட அட்டன்பரோ எகிட்னா இன்னும் அங்கு வாழ்ந்து வருவதற்கான அறிகுறிகள் கண்டறிப்பட்டன.
 
ஆனால் அவர்கள் மலைகளின் மிகவும் தொலைவில் உள்ள பகுதிகளை அணுகி அவற்றின் இருப்பை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை.
 
அதாவது, கடந்த 62 ஆண்டுகளாக அட்டன்பரோ எகிட்னா இருந்ததற்கான ஒரே ஆதாரம், நெதர்லாந்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமான நேச்சரலிஸின் (Naturalis) காப்பக அறையில் (Treasure Room) உயர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள மாதிரிதான்.
 
"இது மிகவும் தட்டையானது" என்று நேச்சுரலிஸில் உள்ள சேகரிப்பு மேலாளர் பெபிங் கமிங்கா அதை எங்களுக்குக் காட்டும்போது கூறுகிறார்.
 
புதிதாக பார்ப்பவர்களுக்கு இது ஒரு நசுக்கப்பட்ட முள்ளம்பன்றியாகவே தெரியும். ஏனெனில் இதை முதன்முதலில் டச்சு தாவரவியலாளர் பீட்டர் வான் ராயன் சேகரித்தபோது அதன் உடலில் உள்ளே எதுவும் நிரப்பப்படவில்லை.
 
இந்த இனத்தின் முக்கியத்துவம் 1998இல் தான் தெரிய வந்தது.
 
அந்த எச்சத்தை எக்ஸ்-ரே ஆய்வு செய்ததன் மூலம் அது மற்றொரு எகிட்னா இனத்தின் இளம் விலங்கு அல்ல என்றும் மாறாக, இது முழுமையாக வளர்ந்த, தனித்துவமான ஓர் எகிட்னா இனம் என்றும் தெளிவானது. எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் அவை கண்டறியப்பட்ட போது, இந்த இனத்திற்கு சர் டேவிட் அட்டன்பரோவின் பெயர் சூட்டப்பட்டது.
 
"இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த உயிரினம் ஏற்கெனவே முற்றிலுமாக அழிந்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். ஏனெனில், நம் கையில் அது இருந்ததற்கான ஆதாரமாக இருந்தது இந்த எச்சம் மட்டுமே," என்று கம்மிங்கா விளக்கினார். "எனவே இந்த மறுகண்டுபிடிப்பு நம்பமுடியாத செய்தி," என்றும் அவர் தெரிவித்தார்.
 
சைக்ளப்ஸ் மலைகள் மிகவும் செங்குத்தானவை மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு ஆபத்தானவை. எகிட்னாக்கள் காணப்படும் உயர்ந்த இடங்களை அடைய, விஞ்ஞானிகள் மழை பெய்யும் நேரங்களில் பெரும்பாலும் பச்சை மஞ்சள் மற்றும் மர வேர்களின் குறுகிய முகடுகளில் ஏற வேண்டியிருந்தது. அவர்கள் ஏறும்போது இருமுறை மலைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன.
 
"எந்த இடத்தில் வேண்டுமானாலும் வழுக்கி விழக்கூடும். கீறல்கள், வெட்டுக் காயங்கள் ஏற்படும். நம்மைச் சுற்றி நஞ்சுள்ள விலங்குகள் இருக்கும். டெத் ஆடர் போன்ற கொடிய பாம்புகள் இருக்கும்," என்று டாக்டர் கெம்டன் விளக்குகிறார்.
 
தரையில் வாழும் இறால் உட்பட பல புதிய இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
 
"எங்கும் அட்டைகள் இருக்கும். அட்டைகள் தரையில் மட்டுமல்ல, இந்த அட்டைகள் மரங்களில் ஏறும், மரங்களில் தொங்கும், பின்னர் ரத்தத்தை உறிஞ்ச நம் மீது விழும்," என்றார்.
 
விஞ்ஞானிகள் சைக்ளப்ஸின் உயர் பகுதிகளை அடைந்ததும், அந்த மலைகள் அறிவியல் கண்டிராத பல புதிய இனங்களால் நிரம்பியிருப்பது தெளிவானது.
 
"நானும் என் சக ஊழியர்களும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தோம்," என்று கிரேக்க பூச்சி நிபுணர் டாக்டர் லியோனிடாஸ்-ரோமானோஸ் டவானோகுளூ கூறினார்.
 
"நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம், ஏனெனில் நாங்கள் எப்போதும், 'இது புதியது, யாரும் இதைப் பார்த்ததில்லை' அல்லது 'ஓ மை காட், இதை நான் பார்க்கிறேன் என்று நம்ப முடியவில்லை' என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். இது உண்மையிலேயே மிகப்பெரிய பயணமாக இருந்தது," என்று உற்சாகமாகப் பகிர்ந்துக் கொண்டார்.
 
பயணத்தின் முதல் வாரத்தில் டாக்டர் டவானோகுளூ தனது கையை உடைத்துக் கொண்டார், ஆனால் மலைகளிலேயே இருந்து மாதிரிகளைச் சேகரித்தார். அவர்கள் ஏற்கெனவே "பல டஜன்" புதிய பூச்சி இனங்களை உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும், மேலும் பல இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அவர்கள் முற்றிலும் புதிய வகையான மரத்தில் வாழும் இறால் மற்றும் முன்பு அறியப்படாத குகை அமைப்பையும் கண்டுபிடித்தனர்.
 
பயணத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் உள்ளூர் லாப நோக்கற்ற நிறுவனமான யப்பேண்டாவும் இணைந்து கொண்டது. அதன் பாதுகாப்பாளரான கிசோன் மோரிப், "சைக்ளப்ஸின் மேல் பகுதி உண்மையில் தனித்துவமானது. நான் அவற்றைப் பாதுகாக்க விரும்புகிறேன். இந்தப் புனித மலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். நமக்குத் தெரியாத பல உள்ளூர் இனங்கள் இங்கு வாழ்கின்றன," என்றார்.
 
 
முந்தைய பயணங்களின் போது, உள்ளூர் பப்புவான் மக்களின் புனிதமான நம்பிக்கை காரணமாக எகிட்னாக்கள் வாழும் சைக்ளப்ஸ் மலைகளின் பகுதிகளை அடைய சிரமமாக இருந்தது.
 
"மலைகள், நிலை உரிமை தலைவி என்று குறிப்பிடப்படுகின்றன. அவளுடைய சொத்தை நன்றாக கவனிக்காமல் இருந்து அவளை வருத்தப்படுத்த விரும்பவில்லை," என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேடலின் ஃபோட் கூறுகிறார்.
 
இந்தக் குழு உள்ளூர் கிராமங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியது. நடைமுறை ரீதியாக அவர்கள் செல்ல முடியாத சில இடங்கள் இருக்கின்றன, அவர்கள் அமைதியாக கடந்து செல்ல வேண்டிய இடங்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
 
அட்டன்பரோ எகிட்னா அவ்வளவு எளிதாக யாரிடமும் சிக்காமல் தப்பிக்கும் திறன் கொண்டது. எகிட்னாவின் இந்தத் திறன், குழுக்கள் இடையே மோதல்களைத் தீர்த்து வைக்க முக்கியப் பங்கு வகிப்பதாக உள்ளூர் மரபு கூறுகிறது.
 
 
 
இரண்டு சமூக உறுப்பினர்களுக்கு இடையே தகராறு ஏற்படும்போது, ஒருவர் எகிட்னாவையும் மற்றொருவர் மார்லின் என்ற ஒரு வகை மீனையும் கண்டுபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்.
 
"அது சில நேரம், பல ஆண்டுகள் ஆகலாம்" என்று திருமதி ஃபோட் விளக்குகிறார்.
 
டாக்டர் கெம்டன், எகிட்னாவின் மறுகண்டுபிடிப்பும் மற்றும் பிற புதிய இனங்களின் கண்டுபிடிப்பும் சைக்ளப்ஸ் மலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உணர்த்துவதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்.
 
அழிவதற்குக் கடுமையான வாய்ப்புள்ளதாக இருந்தாலும், அட்டன்பரோவின் நீண்ட மூக்கு எகிட்னா தற்போது இந்தோனீசியாவில் பாதுகாக்கப்பட்ட இனமாக இல்லை. இந்த விஞ்ஞானிகளுக்கு இதன் மக்கள் தொகை எவ்வளவு என்பதும், இது நிலையானதாக இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
 
"இந்த மழைக்காட்டில் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஆராயப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் இன்னும் கண்டுபிடிக்காத வேறு என்ன இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டும். அட்டன்பரோவின் நீண்ட மூக்கு எகிட்னா நாம் எதைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான சின்னமாகத் தற்போது விளங்குகிறது."