1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. State rights should be protected in Mullaperiyar dam issue Dhinakaran

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் - தினகரன்

Government of Tamil Nadu
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய சுரங்கத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொள்வது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


''சுரங்கம், அணுமின் திட்டங்கள், எண்ணெய் எரிவாயு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கி வரும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முல்லைப் பெரியாறின் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி மற்றும் நீர் கசியும் அளவை பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பருவகால மாறுபாடுகளின் போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் நிலவரம் மற்றும் உறுதித்தன்மையை மத்திய கண்காணிப்புக்குழு அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்து வந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்குவதோடு, ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
மருந்து வாங்க சென்றவர் திடீர் கோடீஸ்வரரான அதிசயம்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த லாட்டரி..!