1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (14:38 IST)

அதிமுக பொதுக்குழுவில் நடந்தவை என்ன? 10 முக்கியத் தகவல்கள்

பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று அதிமுகவின் பொதுக் குழு வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக கட்சித் தலைமையை கையில் வைத்திருக்கின்றனர். இதை மாற்றி, ஒற்றைத் தலைமை தேவை என்று எடப்பாடி ஆதரவாளர்கள் பேசுகின்றனர். இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இந்தப் பின்னணியில் பொதுக் குழு கூட்டம் நடந்தது. நடந்தவற்றை 10 தகவல்களாக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
1. பொதுக் குழுவில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு மேடையில் அமர்ந்திருந்தனர். இருப்பினும் பன்னீர் செல்வத்திடமும் வைத்திலிங்கத்திடமும் யாரும் பேசாமல் இருவரும் தனித்தே அமர்ந்திருந்தனர்.
 
2. சி.வி. சண்முகம் இந்த பொதுக் குழு 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறது என்று பேசினார். அவரை அடுத்து வந்த கே. பி முனுசாமியும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.
 
3. வைகைச்செல்வன் பேசியபோது தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசைனை நிரந்தர அவைத் தலைவராக்க வேண்டும் என்று முன் மொழிந்தார். அந்த முன் மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் மகன் உசைனை அவைத் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இந்த தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.
 
4. பின் மீண்டும் மேடைக்கு வந்து பேசிய சி.வி. சண்முகம், ஒற்றைத் தலைமைதான் தேவை என்று வலியுறுத்தி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் ஒப்படைத்தார். அடுத்த பொதுக் குழுவிற்கான தேதியை இந்த கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
5. இதனை ஏற்றுக் கொண்டு நிரந்தர அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசைன் உடனடியாக அடுத்த தேதியை அறிவித்தார்.
 
6. மேடையில் பேசிய அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் பேசினர்.
 
7. ஒரு கட்டத்தில் கூச்சல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஓ. பன்னீர் செல்வமும், அவருக்கு ஆதரவு அளிக்கும் வைத்திலிங்கமும் மேடையைவிட்டு இறங்கி பொதுக் குழுவிலிருந்து வெளியேறினர்.
 
8. ஓபிஎஸ் மேடையை விட்டு இறங்கும்போது அவர் மீது பாட்டில் வீசப்பட்டது. ஓபிஎஸ் புறப்பட்டபோது வழி நெடுகிலும் ஓபிஎஸ் ஒழிக என தொண்டர்கள் கோஷமிட்டனர்.
 
9. பொதுக் குழுவிலிருந்து வெளியேறிய வைத்திலிங்கம், 'கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்' என தெரிவித்தார். அதைப்போல அடுத்த பொதுக் குழுவிற்கான தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
10. முன்னதாக, அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இன்று அதிகாலை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர, புதிய தீர்மானங்களை கொண்டுவரக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.