ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை இனி ஜீரோதான் – ஜெயக்குமார் ஆரூடம்!
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வந்த நிலையில் கட்சி முடிவுகள் எடுப்பத்தில் இருவருக்கும் இருவேறு கருத்துகள் நிலவியதால் மோதல் போக்கு நிலவியது. இதனால் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த, அதை ஓபிஎஸ் மறுத்து வந்தார். இதனால் இருவருடைய ஆதரவாளர்களும் அணி பிரியவே கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்தார். அதில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டும் நீக்கி பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் கட்சி ஒருங்கிணைப்பாளரை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது என்றும், அதிமுக விதிமுறைகளில் உள்ள கழகத்தின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா என்பதை தீர்மானத்தில் நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் “அரசியலில் ஓபிஎஸ்-ன் எதிர்காலம் இனி ஜீரோதான். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. அவர்களை தவிர மற்றவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் ஏற்றுக் கொள்வோம்” என பேசியுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்துகருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அதிமுக இனி இன்னும் பலவீனமடையும் என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K