இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசாவை நிர்மூலமாக்கியுள்ளதோடு, பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்த ரபா பகுதியிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸ் பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடி நடவடிக்கையில் இறங்கிய இஸ்ரேல் ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண் ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடக்கும் முன்னதாகவே, இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் நுழைந்தால் நாங்கள் எங்கள் போரை தொடங்க வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கும் விதமாக பேசியிருந்த நிலையில் தற்போது லெபனான் மீதான இந்த தாக்குதல் மத்திய தரைக்கடலில் மோசமான போர் சூழலை உருவாக்கலாம் என உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
Edit by Prasanth.K