எதுக்கு போரை நிறுத்தனும்? ஹமாஸ் திரும்ப எங்களை அடிக்கிறதுக்கா? – போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த தாக்குதல்களால் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாது ஏராளமான பாலஸ்தீன பொதுமக்களும் பலியாகினர். பலர் அங்கிருந்து வெளியேறி ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ரபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த உலக நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை உலக நாடுகள் முடுக்கின. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நேற்றுடன் முடிந்த பேச்சுவார்த்தையின்போது ரபா நகரில் இருந்தும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த நிலையில் போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் காசாவில் தங்களை வலுப்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்துவர் என்றும் கூறிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, போரை நிறுத்துவதும், இஸ்ரேல் ராணுவத்தை காசாவிலிருந்து திரும்ப பெறுவதும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K