வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (09:47 IST)

காசாவோடு போர் முடியாது.. ரஃபாவையும் தாக்குவோம்! – இஸ்ரேல் முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி!

israel -Palestine
இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அடுத்து பாலஸ்தீன் மக்கள் அதிகம் உள்ள ரஃபாவையும் தாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு அதிகம் பரவியுள்ள காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். ஐ.நா சபை போரை நிறுத்த இஸ்ரேலிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் போதிலும் ஹமாஸை முழுவதுமாக ஒழிப்பதே தங்கள் இலக்கு என இஸ்ரேல் கூறி வருகிறது.

தொடர்ந்து காசா முனையில் போர் நீடித்து வரும் நிலையில் அங்கிருந்து உயிர்பிழைத்த மக்கள் பலரும் எகிப்து எல்லையருகே உள்ள பாலஸ்தீன பிராந்தியமான ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்து ரஃபாவையும் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது மனிதாபிமானமற்ற செயல் என உலக நாடுகள் பல வருத்தம் தெரிவித்துள்ளன.


மேலும் ரஃபா தாக்கப்பட்டால் எகிப்து எல்லை வழியாக பாலஸ்தீன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான உதவிகள் முற்றிலும் தடைபடும். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த திட்டம் வருத்தம் அளிப்பதாகவும், ரஃபாவை தாக்குவதற்கு பதிலாக வேறு வழிகள் இருந்தால் அதை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள 10 லட்சம் பாலஸ்தீன் மக்களை சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேறு இடத்திற்கு மாற்றுவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் காசாவிலேயே மக்கள் தங்குமிடங்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதலை நடத்திய இஸ்ரேல் இந்த வாக்குறுதியை எந்த அளவு பின்பற்றும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Edit by Prasanth.K