சமீபத்தில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரபு நாடுகள் அமைப்பு ஒன்று கூடி இஸ்ரேலுக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் காசாவை மட்டுமல்லாமல், ஹமாஸ்க்கு ஆதரவளிக்கும் லெபனான், கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சமீபத்தில் கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அரபு நாடுகள் கூட்டமைப்புக்கு கத்தார் அழைப்பு விடுத்தது. இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கத்தார் மன்னர், சவுதி இளவரசர், ஈரான் அதிபர், ஈராக் பிரதமர், பாலஸ்தீன அதிபர் என பல அரபு, இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்பு நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K