வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (08:42 IST)

யார் இந்த நெல் ஜெயராமன்: ஒரு சிறப்பு பார்வை

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் என்று  நாடே போற்றப்படும் நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார். அவரது இழப்பு இந்திய விவசாயிகளுக்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரான நெல் ஜெயராமன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வமுள்ள ஜெயராமன், நமது பாரம்பரிய நெல் விதைகள் அழிந்து வருவதை கண்டு மனம் வருந்தி, அந்த நெல் வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கடந்த 22  ஆண்டுகளில் அவர் 174 வகை பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து அவற்றை மறு உற்பத்தி செய்து சாதனை புரிந்தார். அதுமட்டுமின்றி பாரம்பரிய நெல் விதைகளின் மகத்துவம் குறித்து சக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 37 ஆயிரம் விவசாயிகளை பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு மாற்றினார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இவருடைய அறிவுரையால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகளின் உண்மையை புரிந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழா என்ற விழாவை ஏற்பாடு செய்து அதில் இந்தியாவில் உள்ள முக்கிய விவசாயிகளை கலந்து கொள்ள செய்தார். பல மாநில, தேசிய விருதுகளை பெற்ற ஜெயராமன், தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் ஆகிய அமைப்புகளை நடத்தி அதன்மூலம் நலிந்த விவசாயிகளுக்கு சேவை செய்தார்.

இந்த நிலையில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன் அவரை கொடிய புற்றுநோய் தாக்கியது. ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு கூட பணமில்லாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் அவரது உயிரை காப்பாற்ற மருத்துவ செலவை ஏற்றனர். தமிழக அரசும் அவரது சிகிச்சைக்கு நிதியுதவி செய்தது. இருப்பினும் இன்று காலை நெல் ஜெயராமன் சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவர் மறைந்தாலும் அவர் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் விதைகள் என்றுமே அழியாது