வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (21:42 IST)

அஜித், வெங்கட்பிரபு திடீர் சந்திப்பு ! – உறுதியானதா மங்காத்தா 2 ?

நடிகர் அஜித்தை நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு சந்தித்துள்ளதால் அவர்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதாகக் கூறப்பட்டு வரும் மங்காத்தா 2 படம் பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன.

வெங்கட்பிரபு சென்னை 28 ,சரோஜா, கோவா எனத் தனது நண்பர்களை வைத்து மல்டிஸ்டார் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்து அதில் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்தான் மங்காத்தா. ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் ஜானர்களில் ஒன்றான  பாய்ஸ்  ஒன்லி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பைக் கண்டு ரசிகள்கள் குறிப்பாக இளைஞர்கள் புல்லரித்து சில்லறையை சிதற விட்டனர்.

அதன் பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்துப் படம் இயக்க ஆரம்பித்தார். ஆனாலும் மங்காத்தா போல பேர் சொல்லும் படங்கள் எதுவும் அவரிடம் இருந்து அதன் பின்னர் வரவில்லை. இதையடுத்து அஜித் ரசிகர்கள் அவரிடம் அவ்வப்போது மங்காத்தா 2 பற்றியக் கேள்விகளை டிவிட்டரில் கேட்டு வந்தனர்.

அதையடுத்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ‘உங்கள் எல்லோருக்கும் மங்காத்தா 2 எப்போது வரும் என்ற கேள்வி இருக்கும்… எனக்கும் அந்த ஆசை உண்டு… அந்தப் படத்தை மீண்டும் பண்ணலாமா ? அல்லது வேண்டாமா ? என்ற பயம் எனக்கு இருக்கிறது… ஆனால் அஜித்துடன் கண்டிப்பாக மீண்டும் இன்னொருப் படம் பண்ணுவேன்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அஜித்தை சந்தித்து அந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் மங்காத்தா 2 உறுதியாகிவிட்டதா எனவும் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுதான் எனவும் டிவிட்டரில் மகிழ்ச்சியாக செய்திகளைப் பரப்பி வருகின்றனர். ஆனால் வெங்கட் பிரபு தரப்பில் இருந்து உறுதியான பதில் எதுவும் இதுவரை வரவில்லை. அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கும் பிங்க் ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார்.