வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (08:03 IST)

லால் சலாம் படத்தோடு மோதல்.. ரஜினிகாந்திடம் பேசிய கேப்டன் மில்லர் தயாரிப்பாளர்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தோடு கேப்டன் மில்லர் மோதுகிறது. தனுஷ் நடித்துள்ள படம் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள படம் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதில் பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தனுஷ்தான் வேண்டுமென்றே பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய சொல்லி தயாரிப்பாளரை வலியுறுத்தியதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மையில் கேப்டன் மில்லர் பொங்கல் ரிலீஸுக்கு தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தவிர்க்க முடியாத சில காரணங்களால்தான் பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இது சம்மந்தமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன், தொலைபேசியில் ரஜினிகாந்தோடு பேசி ரிலீஸ் சம்மந்தமாக விளக்கமளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தும் அவரிடம் அதுபற்றி தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.