அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பலக்கோடி செலவில் கட்டப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகள் சாம்பலாகியுள்ளன.
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லாஸ் ஏஞ்சலிஸின் முக்கிய பகுதியான ஹாலிவுட் ஹில்ஸில் பல ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்களும், ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகளும் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயால் பல கோடி செலவில் கட்டிய வீடுகளை இழந்துள்ளனர் ஹாலிவுட் பிரபலங்கள் பலர்.
பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் ஆசை ஆசையாய் மாலிபு பகுதியில் கட்டிய வீடு எரிந்து சேதமடைந்துள்ளதை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார்.
இதுபோல கேரி எல்விஸ், ஆடம் ப்ராடி, லெய்டன் மீஸ்டர், அண்டனி ஹாப்கின்ஸ் என பல ஹாலிவுட் நடிகர், நடிகையர் தங்களது ஆடம்பர வீடுகளை ஒரு நாளிலேயே இழந்துள்ளனர். பல இடங்களில் வீடுகள் எரிந்து சாலை வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கலிபொர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
Edit by Prasanth.K