உலக கோப்பை கால்பந்து கனவு கலைந்தது! வெளியேறிய இந்தியா!
உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் இந்திய அணி விளையாட வேண்டும் என்ற ரசிகர்களின் கனவை தகர்த்து தகுதி சுற்றிலேயே வெளியேறியது இந்தியா.
உலக கோப்பை கால்பந்து போட்டி 2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. உலக கோப்பை கால்பந்து ஆட்டத்துக்கான தகுதி போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆசியாவை சேர்ந்த 40 அணிகள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று ரவுண்டுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் இறுதியாக 12 அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
இதுவரை நான்கு போட்டிகளில் பங்குபெற்றுள்ள இந்தியா 3 ஆட்டங்களில் டிரா மற்றும் 1 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை தந்திருக்கிறது. இந்நிலையில் இன்று ஓமனுடம் இந்தியா மோதும் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தில் ஒரு கோல் கூட போட முடியாமல் தவித்த இந்திய அணியை ஒரே ஒரு கோல் போட்டு கதை முடித்தது ஓமன்.
இதுவரை இந்தியா – ஓமன் அணிகள் 12 முறை நேருக்கு நேர் போட்டியிட்டுள்ளன. அதில் ஓமன் 9 முறை வெற்றிப்பெற்றுள்ளது. இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறுதிச்சுற்று செல்லும் இந்தியாவின் வாய்ப்பு சில போட்டிகள் மிச்சம் இருந்தாலும் ஏறத்தாழ முடிந்தே விட்டது. இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் 2 தோல்வி 3 டிரா என்ற கணக்கிலேயே இந்தியா நீடித்து வருகிறது.