ஓரின சேர்க்கையாளரா இந்த ஓட்ட பந்தய வீராங்கனை?

Last Updated: திங்கள், 20 மே 2019 (13:23 IST)
இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனைகளில்  ஒருவர் ஒடிசாவை சேர்ந்த டூட்டீ சந்த். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர்  ஓட்டப்பந்தயங்களில் வெள்ளிப்பதக்கம் வென்ற இவர், 100  மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை  அடைந்த தேசிய சாதனையாளராக வலம் வருகிறார். 
சில வருடங்களுக்கு முன்பு இவரது ஹார்மோனில்  ஆண்தன்மை அதிகம் இருப்பதாக கூறி போட்டிகளில்  பங்கேற்க தடை விதிக்கபட்டது. விளையாட்டுக்கான நீதிமன்றத்தில் முறையிட்டு தனக்கு சாதகமான தீர்ப்பை  பெற்றார் டூட்டீ சந்த்.
 
தற்போது தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும், ஒரு  பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும்  தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டூட்டீ சந்த்.  இதுபற்றி அவர் கூறும்போது “கடந்த 5 ஆண்டுகளாக எனது சொந்தக்கார பெண் ஒருவருடன் காதலில்  இருக்கிறேன். அவர் தற்போது புவனேஷ்வரில் உள்ள  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது  வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் நிறைய  நேரத்தை செலவிடுவேன். எதிர்காலத்தில் அவளோடே  சேர்ந்து வாழ விரும்புகிறேன்.
 
எனது வீட்டில் என் மூத்த சகோதரியின் ஆதிக்கம் அதிகம். எனது சகோதரன் மனைவியையே அவர் வீட்டை விட்டு விரட்டிவிட்டார். என்னையும் குடும்பத்தில் சேர்க்கமாட்டேன், இங்கிருந்து போய்விடு என மிரட்டி வருகிறார். நான்  சட்டப்படி 18 வயதிற்கு மேற்பட்டவள் என்பதால் என்  விருப்பப்படி வாழ எனக்கு உரிமை உண்டு. அதனால் என் சிநேகிதியுடன் உள்ள காதலை, அவளோடு வாழ போவதை  வெளிப்படையாக சொல்கிறேன். என் சகோதரி இந்த உரவு  நீடித்தால் என்னை சிறைக்கு அனுப்பிவிடுவதாக   மிரட்டுகிறார். நான் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே என்  லட்சியம்” என தெரிவித்துள்ளார்.
 
தன் காதலிக்கும் பெண்ணின் பெயரை வெளியிட டூட்டீ சந்த்  மறுத்துவிட்டார். ஒரு பெண் வீராங்கனை வெளிப்படையாக  தான் ஒரு ஓரின் சேர்க்கையாளர் என கூறியிருப்பது மற்ற  விளையாட்டு வீராங்கனைகளிடையே ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :