இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று முதல் ஆரம்பமான நிலையில் முதல் போட்டி துபாயில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியிடம் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. ரஹிம் மிக அபாரமாக விளையாடி 150 பந்துகளில் 144 ரன்கள் அடித்தார். அதேபோல் முகமது மிதுன் 68 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
262 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது.
ரஹிம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 2 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. இன்று பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதவுள்ளது.