வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (12:37 IST)

இந்திய கடற்படையோடு மோதும் தமிழக ஹாக்கி அணி – அகில இந்திய ஹாக்கி போட்டி

நாளை சென்னையில் தொடங்கவிருக்கும் அகில இந்தியா ஹாக்கி போட்டியில் இந்திய கடற்படை அணியோடு தமிழ்நாடு ஹாக்கி அணி மோத இருக்கிறது.

மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் மற்றும் முருகப்பா நிறுவனம் இணைந்து வழங்கும் 93வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நாளை முதல் தொடங்க இருக்கின்றன. இதில் மொத்தம் 10 இந்திய அணிகள் பங்கேற்கின்றன. நாளை தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெறும் இப்போட்டிகள் எழும்பூர் அருகே உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளன.

நாளை முதல் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி அணியும், இந்திய கப்பற்படை அணியும் மோத இருக்கின்றன. இந்த ஆட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது சுற்றில் பஞ்சாப் தேசிய வங்கி அணியும், பெங்களூரு ஹாக்கி அணியும் மோத இருக்கின்றன. இது மாலை 6 மணிக்கு தொடங்கும்.

குழு ஏ மற்றும் குழு பி என்ற இரண்டு குழுக்களிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்குள் நடைபெறும் சுற்று ஆட்டங்களில் குழுவுக்கு இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரையிறுதி போட்டி நடைபெறும்.

இந்த போட்டியில் சாம்பியன்ஷுப் வெல்லும் அணிக்கு 6 லட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 3.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படும். இது தவிர சிறப்பு முன்வரிசை வீரர், நடுவரிசை வீரர், கோல்கீப்பர் மற்றும் ஆட்டநாயகன் ஆகிய விருதுகளும், பரிசு தொகைகளும் வழங்கப்பட இருக்கின்றன.