டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு டிக்கெட் இவ்வளவா? நெஞ்சை பிடித்த ரசிகர்கள்

olympics
Last Modified வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (12:47 IST)
அடுத்த வருடம் ஜப்பானில் நடக்க இருக்கும் உலகளாவிய ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகின் பல மூலைகளிலும் இருந்தும் விளையாட்டு வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியை காண விற்கப்படும் டிக்கெட்டின் விலை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் கூட்டமைப்பு நாடுகள் ஒன்றில் நடைபெறும். கடந்த 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. 2020-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் ஜப்பானில் டோக்கியோவில் நடக்க இருக்கிறது.
olympics

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான இதில் கலந்துகொள்ள 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் ஜப்பானுக்கு வர இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகளுக்காக ஜப்பான் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இப்போதே தொடங்கி விட்டது. மேலும் பல நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களும், மக்களும் இந்த போட்டிகளை காண ஜப்பான் வருவதால் நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை தங்கள் வாடகையை அதிகரித்து உள்ளன. மேலும் இப்போதே டிக்கெட்டுகளை வாங்கி கள்ள மார்க்கெட்டில் விற்கும் அபாயமும் உள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கும் குலுக்கல் முறையிலேயே டிக்கெட் அளிக்கப்படுகிறது. தோராயமாக ஒரு டிக்கெட்டில் விலை இந்திய மதிப்பில் 2000 முதல் 2 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை காண்பதற்காக பார்வையாளர்களுக்காக 78 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பு குழு கூறியுள்ளது. அதில் 80 சதவீத டிக்கெட்டுகள் உள்ளூர் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் டிக்கெட்டுகளிலிருந்து மற்ற நாட்டு மக்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என அவர்கள் கூறியுள்ளார்கள்.

olympics

அதுமட்டுமல்லாமல் லக்சரி டிக்கெட் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஒலிம்பிக் நடக்கும் 9 நாட்களுக்கும் தங்குதல், உணவு, அரங்க அனுமதி, கார் வசதி என சகல சவுகரியங்களையும் ஏற்படுத்தி தந்து விடுவார்கள். ஒரு லக்சரி டிக்கெட்டின் விலை 43 லட்சம் ஆகும்.

விடுதிகளின் வாடகை கட்டணம் உயர்வு, டிக்கெட் கள்ள மார்கெட்டில் விற்கப்படுதல் என பயணிகளுக்கு அதீத செலவு வைக்கும் விஷயமாக இது இருக்கப்போகிறது என பலர் கவலை தெரிவித்துள்ளனர். பல நாடுகள் ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு வசதிகளை தாங்களே ஏற்படுத்தி கொடுக்கின்றன. ஆனால் சில நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் சொந்த பணத்திலேயே இவ்வளவு தூரம் பயணித்து தங்கள் இலக்கை அடைய வேண்டியுள்ளது. அவர்களுக்கு இதுப்போன்ற கட்டண உயர்வுகள் பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :