திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா...?
கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.
தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம்பிடிக்க வேடர்களுடன் செய்த சிறுபோரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது.
தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.