புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட புதிய சக்தியின் தோற்றம்தான் முருகப்பெருமானா...!!

சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்து வந்தான். பின்பு அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்தும், தனது சகோதரர்கள் மற்றும் தன்னைப் போன்ற பல அசுரர்களை கொண்டும் ஆட்சி புரிந்து வந்தான்.

சொர்க்கலோகம் சென்று இந்திரன் இல்லாமையால் இந்திரன் மகனான சயந்தன் முதலான சொர்க்கலோகத்தை சேர்ந்த தேவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு எண்ணிலடங்கா பல துன்பங்களை அளித்து வந்தான். அவர்கள் அடையும் துன்பத்தை கண்டு அசுரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தனர். 
 
ஆனால், இந்திரனோ சூரபத்மனின் வருகையை உணர்ந்து இந்திரலோகம் விடுத்து பூலோகத்தில் வந்து மறைந்து கொண்டார். அசுரர்களின் அதர்ம செயலானது சொர்க்கலோகம் மட்டுமின்றி பூலோகத்தில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் பாதித்தது. 
 
ஜீவராசிகளுக்கு இவர்கள் இழைத்த தீமைகளை கண்ட தேவர்கள் அனைவரும், இந்திரனுடன் கைலாயம் சென்று சிவபெருமானிடம் தாங்கள் அடைந்து வரும் துன்பங்களில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்றும் பணிந்து நின்றனர்.
 
தேவர்கள் அடைந்து வந்த இன்னல்களை அறிந்த சிவபெருமான் அவர்களுக்கு உதவும் பொருட்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடியவன் விரைவில் வருவான் என்று கூறினார். 
 
சிவபெருமான் சூரபத்மனுக்கு அளித்த வரத்தின் அடிப்படையிலேயே அவனை அளிக்கக்கூடிய ஒருவரை உருவாக்க தொடங்கினார். அதாவது பார்வதிதேவி கருவுற்று ஈன்று எடுக்காமல் அந்த சக்தியினை உருவாக்க தொடங்கினார். தனது ஒற்றர்களின் மூலம் தேவர்கள் மற்றும் அவர்களின் வேந்தனான இந்திர தேவன் உட்பட அனைவரும் சிவபெருமானை காண கைலாயம் சென்றதை அறிந்து கொண்ட சூரபத்மன் தனது சகோதரனான தாரகாசுரனை அனுப்பி அவர்களை சிறை பிடிக்குமாறு உத்தரவிட்டான்.
 
தேவர்களின் இன்னல்களை போக்க பார்வதிதேவியும், எம்பெருமானும் கைலாயத்தில் இருந்த குகைக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆனந்த தாண்டவத்தில் இருந்தனர். பின்பு தாண்டவத்தின் மகிழ்ச்சி நிலையில் எம்பெருமானுடைய சக்தியின் ஒரு பகுதியும், பார்வதிதேவியினுடைய சக்தியின் ஒரு பகுதியும் இணைந்து பார்வதிதேவி கருவுறாமல் ஒரு புதிய சக்தியின் தோற்றத்திற்கு அடிப்படையாக இருந்தன. 
 
சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். தேவர்களையும், முனிவர்களையும் வெகுகாலமாக அச்சுறுத்தி வந்த சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்னும் அரக்கர்களை அழிப்பதற்காக முருகர் அவர்களுடன் போர் புரிய துவங்கினார். அந்தப் போரில் முருகப் பெருமான் வெற்றி கொண்டார்.