வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (15:36 IST)

நிபா வைரஸ் பாதித்து 24 வயது வாலிபர் உயிரிழப்பு: கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்..!

நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
 
மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் நேரடியாக தொடர்பில் இருந்த 26 பேர் மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பரவலை தடுக்க தேவையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
உயிரிழந்த இளைஞர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் கல்வி கற்றவர். அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் யாருக்கும் நோயின் அறிகுறிகள் உள்ளனவா என்பதை கண்டறிய கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
26 பேரில் முதற்கட்டமாக 13 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது, இதில் நிபா வைரஸ் இல்லை என்பதற்கான உறுதிப்படுத்தல் கிடைத்தது. மீதமுள்ள 13 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
 
நிபா வைரஸ் மனித உடலில் நுழைந்தால் 21 நாட்கள் வரை தங்கி, 9 நாட்களுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் வெளிப்படும். இந்தகாலம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதுடன், நோயின் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
 
Edited by Siva