நிபா வைரஸ் பரவல் எதிரொலி.! தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!!
நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் 24 வயது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த 175 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 74 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த 175 பேரில் 13 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்த 13 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மலப்புரம் மாவட்டத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளாவில் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கர்நாடகா அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்தந்த மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.