ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை.? எடப்பாடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!!
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தி அழைக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கரின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் குறித்து திமுககாரர் பேசுவதை விட, சிறப்பாக பேசியதாக கூறினார்.
அரசியல் தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டு நடப்பு பற்றி புரிந்திருக்க வேண்டும் அல்லது மூளையாவது இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை சாடிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக இந்த நிகழ்வு நடைபெற்றது என்று தெரிவித்தார்.
அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும், அண்ணா, கலைஞர் பெயரிலான நாணயத்தில் மட்டும்தான் தமிழ் இடம் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். கலைஞர் பெயரிலான நாணயத்தில் `தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது என்றும் இதைக் கூட புரிந்து கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் தான் நமக்கு கிடைத்திருக்கிறார் என்றும் முதல்வர் விமர்சித்தார்.
ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என எடப்பாடி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.
ராஜ்நாத் சிங்கை அழைத்து நாம் நிகழ்ச்சி நடத்தியதால் திமுக, பாஜகவுடன் உறவு வைத்திருக்கிறது என்ற ஒரு செய்தியை கிளப்பி இருக்கிறார்கள் என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமியை போல உருண்டு போய், பதுங்கி போய் பதவி வாங்க வேண்டிய தேவை திமுகவுக்கு கிடையாது என்றும் முதல்வர் விமர்சித்தார்.