வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!
மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை கையாளுகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது என்பதும் குறிப்பாக மும்மொழிக் கொள்கையை திணிப்பதன் மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும் திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது வானிலை முன்னறிவிப்பிலும் கூட ஹிந்தியை திணிப்பதாக மதுரை எம்பி வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொட்ங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது.
பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்.
Edited by Siva