தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
இன்று முதல் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் சராசரியாக வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும், வடமேற்குப் பகுதிகளில் சில இடங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கடுமையான வெப்பத்தால் அதிக பாதிக்கப்படும் பகுதியாக இருக்கும் எனவும், தென் மாநிலங்களிலும் வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாட்டில், இந்த வெப்பத்தால் பல்வேறு பகுதிகளில் மக்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் வெப்பம் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதியம் நேரங்களில் வெப்பக் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. அதனால், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காக வெளியே செல்லும் நபர்கள் குடை, தொப்பி போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும். முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைவாக உள்ளவர்கள் வெயிலில் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Edited by Mahendran