எஸ்மா சட்டம் பாயுமா போக்குவரத்து ஊழியர்கள் மீது?: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் இன்று காலை முறையிட்டார்.
இதே போல சென்றமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். அப்போது செந்தில்குமரய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன் மற்றும் சேஷய்யா ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அப்படி வேலைக்கு திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இந்தமுறையும் நீதிமன்றம் கடுமை காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணா மற்றும் புஷ்பலதா ஆகியோர், தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று நாங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். ஆனால் அரசு அதை நிறைவேற்றவில்லை.
தொழிலாளர்களின் தரப்பிலிருந்தும் இந்த பிரச்சினையை அணுக வேண்டும். ஆகையால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று மறுத்து அதிரடி காட்டியுள்ளனர்.