திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (10:54 IST)

1971 துக்ளக் பத்திரிக்கை மறுபிரசுரம்? துக்ளக் குருமூர்த்தி தகவல்!

1971ம் ஆண்டு சேலத்தில் நடந்தவை குறித்து அன்று துக்ளக்கில் வெளியான செய்தியை மறுபிரசுரம் செய்ய இருப்பதாக துக்ளக் குருமூர்த்தி கூறியுள்ளார்.

1971ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படும் சம்பவங்கள் இன்று தமிழக அரசியலிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் பெரியாரிய இயக்கங்கள் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று சொன்னாலும், பாஜகவை சேர்ந்த பலர் செருப்பால் அடித்த சம்பவம் நடந்ததாக வாதிட்டு வருகிறார்கள்.

துக்ளக் இதழில் வெளியானதாக கூறப்படும் செய்தி தற்போது பெரும் ட்ரெண்ட் ஆகியிருப்பதால் அதை மறுபிரசுரம் செய்ய இருப்பதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். அதேசமயம் புத்தகத்தையே மறுபதிப்பு செய்ய தேவையில்லை என்றும், 1971ல் சேலம் போராட்டம் குறித்து துக்ளக் இதழில் எழுதப்பட்ட செய்தியை மட்டும் அடுத்த இதழில் பிரசுரிக்க யோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த செய்தியை எழுதிய ஆசிரியர் சோ செவிவழி செய்திகளை கொண்டு எழுதியதாக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதாக கூறப்படும் நிலையில் மீண்டு சர்ச்சைக்குரிய அந்த செய்தி பத்தியை வெளியிடுவதில் சிக்கல்கள் உண்டாகலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.