1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (16:06 IST)

அழகிரியாகிய நான்…! – மையத்துக்கு வந்த கே.எஸ்.அழகிரி!

ரஜினி பெரியார் குறித்து துக்ளக் விழாவில் பேசியதை பல அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடுநிலையாக இரு பக்கமும் சாராமல் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து அவர்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ” அழகிரியாகிய நான் ஶ்ரீராம பிரான் மீது நம்பிக்கை உடையவன். எனவே அவரை வணங்குகிறேன். தந்தை பெரியார் ராம பிரான் மீது நம்பிக்கை இல்லாதவர் எனவே அவர் விமர்சித்தார். வணங்கவும் விமர்சிக்கவும் ஐனநாயகத்தில் உரிமை உண்டு. திரு.ரஜினி அவர்கள் துக்ளக் விழாவில் பெரியாரின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்திருக்கிறார்.அதனால் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்ட உடன் இவைகளை மறந்துவிட வேண்டும் என திரு.ரஜினி கூறுகிறார். மறக்க வேண்டியவைகளை அவர் ஏன் நினைவு கூறுகிறார் என்பது தான் இன்றைய கேள்வி ...” என்று கூறியுள்ளார்.

தனது நண்பர் ரஜினியை விட்டுக்கொடுக்க முடியாமலும், பெரியாரை ஏற்றுக்கொள்ள முடியாமலும் இரண்டையும் ஆதரிக்குமாறு நடுநிலையாக பேச அழகிரி முயற்சிக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.