1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (16:34 IST)

அடுத்த இரண்டு மாதம் மிக மிக முக்கியமான மாதம்..! பொதுமக்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்..!!

udayanithi
கோவை சரவணவம்பட்டி பகுதியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்கி வைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்டங்களை  வழங்கினார். 
 
இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 780 கோடி மதிப்பு குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள்(பில்லூர் |||)  362.20 கோடி மதிப்பில் கோவை திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த  அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் 39.11 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் கோயம்புத்தூர் முழுமை திட்டம் தொடர்பான இணையதள முகவரி மற்றும் க்யூஆர் கோடு தொடங்கி வைக்கப்பட்டது. 
 
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைவர் முகத்திலும் பசி தெரிகிறது எனவும் எனக்கும் பசிக்கிறது என தெரிவித்தார்.  பசிக்காக உணவு அருந்தினால் உணவு மற்றும் பத்தாது குடிநீரும் மிக முக்கியம் என தெரிவித்த அவர், அந்த வகையில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்றார். நான் அடிக்கடி செல்கின்ற ஊர் என்றால் அது கோவை தான் எனவும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்ந்த ஊரும் இதுதான் எனவும் பெருமிதம் கொண்டார்.

மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் எனது வீட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிலும் அதிகமாக உபயோகிக்கிறோம் எனவும் கூறினார். இந்த திட்டத்தின் மூலமாக முதலமைச்சர் தந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறிய அவர், இதனால் கோவையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

udayanithi stalin
இதற்கு காரணம் கலைஞரின் தொலைநோக்கு பார்வை தான் என்றார். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்காக வருபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது என கூறுய அவர் தமிழ்நாடு வேகமாக நகரமயம் ஆகி வருகிறது, எனவே அதற்கு ஏற்றவாறு உட்கட்டமைப்புகளை அமைக்கின்ற கடமை அரசிற்கு உள்ளது என்றார். 
 
இந்த திட்டத்தின் மூலம் கோவையில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்க பெறும் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் இதர நகரங்களுக்கும் தமிழ்நாடு நகரங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளது என கூறிய அவர், தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல் கோவை மதுரை திருச்சி சேலம் என அனைத்து நகரங்களும் வளர்ந்து வருகிறது எனவும் இதனை மற்ற மாநிலங்களில் பார்க்க முடியாது என்றார். 
 
தொழில் கல்வி சுகாதாரம் நகர உட்கட்டமைப்பு என்ற அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என கூறிய உதயநிதி ஸ்டாலின் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு ஒரு மாடல் அரசாக திகழ்ந்து வருவதாகவும் இதனைத் தான் நாம் திராவிட மாடல் என்று அழைத்து வருகிறோம் என்றார். மேலும் நம்முடைய திட்டங்களை பார்ப்பதற்காக இதர மாநிலங்களில் இருந்து அரசு அலுவலர்கள் வந்து செல்கின்றனர் எனவும் கூறினார். 
 
கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் ஒன்றிய அரசிற்கு நாம் கொடுத்து இருக்கக்கூடிய வரி 6 லட்சம் கோடி ரூபாய் எனவும் ஆனால் அவர்கள் நமக்கு வெறும் 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி தான் திருப்பி தருகிறார்கள் எனவும் அதாவது 1 ரூபாய் கொடுத்தால் 29 காசுகள் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்து திருப்பி தரப்படுகிறது என்றார்.
 
அடுத்த இரண்டு மாதம் மிக மிக முக்கியமான காலம் என கூறிய உதயநிதி ஸ்டாலின், இது உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் எனவும் கடந்த முறை சிறு சிறு தவறுகள் நடந்திருந்தாலும் அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். மக்களாகிய  நீங்கள் தான் எங்கள் அரசின் தூதுவர்கள் முதலமைச்சரின் முகம் என்று கூறி உரையை முடித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த சிறந்த விளையாட்டு துறை மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கெளரவித்தார். 

 
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  கே.என்.நேரு, வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்,  மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.