மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!
மனைவி ஆசைப்பட்டார் என்பதற்காக இளம் பெண்ணிடம் தங்கச் செயினை பறித்த இளைஞர் சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் மனைவி பிரியங்கா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் கதவை திறந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் இருந்த மிளகாய் பொடியை பிரியங்காவின் முகத்தில் வீசி, அவருடைய தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனை அடுத்து காவல்துறையில் பிரியங்கா புகார் செய்தார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்டது வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்று தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு இளைஞர் நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அவரை பிடித்து விசாரணை செய்தபோது பிரியங்காவின் தாலி செயினை பறித்தது அவர்தான் என்று தெரியவந்தது.
தன்னுடைய மனைவிக்கு தங்கச் செயின் என்றால் மிகவும் விருப்பம், ஆனால் அதை வாங்கி கொடுக்க பணம் இல்லாததால், செயினை பறித்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த இளைஞரின் பெயர் ராம் மிலன் என்றும், அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Edited by Siva