வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 மே 2020 (08:02 IST)

இரண்டு நாளில் 300 கோடியை நெருங்கிய டாஸ்மாக் வருமானம்! மதுரைதான் நம்பர் 1

தமிழகத்தில் 45 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் 294 கோடி ரூபாய் வசூல் ஈட்டப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் டாஸ்மாக் கடையை திறந்து தமிழக அரசு 172 கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது. இதற்கே சென்னையில் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று டாஸ்மாக் வருமானம் 122 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் இரு நாட்களில் 294 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

தமிழகத்தில்  அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதால் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.