வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 மே 2024 (19:00 IST)

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

Kaveri Kookural
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் இந்தாண்டு (2024-25 நிதியாண்டில்) ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 
இதையொட்டி,  பொள்ளாச்சியில் இன்று (மே 23) நடைபெற்ற விழாவில்  பொள்ளாச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முக சுந்தரம் அவர்கள் முதல் கன்றை நட்டு வைத்து இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சக்தி குழுமத்தின் தலைவர் திரு. மாணிக்கம், கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. வசந்த குமார், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் தலைவர் திரு. ஜி.டி. கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக எம்.பி. சண்முக சுந்தரம் அவர்கள் கூறுகையில், “ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் பருவநிலை மாற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மரக்கன்றுகள் நடுவது தான் சிறந்த தீர்வாகும். அந்த வகையில், விவசாய நிலங்களில் மரம் நடும் இந்த அற்புதமான திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.

கடந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தொண்டாமுத்தூரில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் முதல் மரக்கன்றையும், 2-வது லட்சம் மரக்கன்றையும் என்னை அழைத்து நட வைத்தார்கள். ஈஷா மேற்கொண்டு வரும் இந்த நற்செயல் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலரும், முன்னோடி விவசாயியுமான திரு. வள்ளுவன் அவர்கள் கூறுகையில், “உலகிலேயே வேறு எந்த சுற்றுச்சூழல் இயக்கமும் செய்யாத மாபெரும் சாதனையை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது. விவசாய நிலங்களில் ஓராண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடும் இலக்கை நாங்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற சாதனை நிகழ்த்தப்பட்டது இல்லை. அந்த வகையில், முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் நாம் இதை நிகழ்த்தி காட்டி வருகிறோம். இத்திட்டத்தின் மூலமாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஆலோசனைப்படி, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டு 7,63,087  மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தாண்டு 9,55,000 மரக்கன்று நடும் பணியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்” என்றார்.

மேலும், மரக்கன்று நட விரும்பும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச ஆலோசனைகள் குறித்து பேசும் போது, “விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவதற்காக 130 களப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றனர். மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என கூறினார்.