1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திருவள்ளூர் , வியாழன், 23 மே 2024 (17:55 IST)

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூரில் உள்ள அருள்மிகு திருவுடையம்மமன் கோவிலில் மத்திய இணையமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளருமான எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் ....
 
பிரதமர் மோடி 10ஆண்டுகள் ஆட்சி டிரைலர் தான் எனவும், இனிமேல் தான் மெயின் பிக்ச்சர் என பிரச்சாரத்தில் பேசி வருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு 2004 முதல் 2014 வரையிலான திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் மிகப்பெரிய சீரழிவை செய்ததாகவும், அதனை சரிசெய்ய 10ஆண்டுகள் தேவைப்பட்டதாக கூறினார். மேலும் அதற்கு முன்பு ஆண்ட காங்கிரஸ் இந்த நாட்டில் எந்தவித வளர்ச்சியையும் செய்யவில்லை என்றார்.
70வருடமாக ஏழ்மையை ஒழிப்பதாக நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோர் கூறி வந்ததாகவும், ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். 2014ல் ஆட்சி வந்த மோடி 25கோடிக்கு மேல் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழிருந்து மேலே வந்துள்ளதாக கூறினார். கடந்த 10ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 10லட்சம் கோடி நிதி கொடுத்திருப்பதாகவும், தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டையும் உலக அரங்கிற்கு கொண்டு சென்றுள்ள பெருமை பிரதமருக்கு உள்ளது எனவும், 2047ல் நாடு முதன்மையான நாடாக வல்லரசு நாடாக இருக்கும் என பிரதமர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
 
வடமாநிலங்களில் மக்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாக நடிகர் ஹிப்ஹாப் ஆதி கூறியது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்க மறுத்த எல்.முருகன்  அந்த நடிகரெல்லாம் (ஹிப்ஹாப் ஆதி) யாரென்றே தெரியாது என கூறி வடமாநில மக்களின் நிலைமை பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். 
 
2024 மட்டுமல்ல 2029லும் நரேந்திர மோடியே பிரதமர் என அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தெளிவுபடுத்தி உள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.
 
கோவில் பராமரிப்பின்மை, சாலைகள் மோசம் இவை எல்லாம் தான் திராவிட மாடல் அரசு என சாடினார். போலி திராவிட மாடல் அரசை நடத்தி கொண்டிருப்பதாக கூறினார். பழவேற்காடு முகத்துவாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழ்நாடு அரசு ப்ரோபோசல் அனுப்புமாறு கூறியும், இன்னமும் அனுப்பவில்லை எனவும், ஏராளமான நிதி தங்களிடம் இருப்பதாகவும், தமிழ்நாடு மீன்வளத்துறைக்கு மட்டுமே 1800கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாகவும், ப்ரோபோசல் கொடுத்தால் நிதி ஒதுக்க தயாராக இருப்பதாக கூறினார். 
 
திமுக அரசுக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் சம்மந்தம் இல்லை எனவும், அவர்கள் கோவிலை விட்டு வெளியே வர வேண்டும் என மக்கள் எண்ணமாக இருப்பதாக கூறினார்.  ஊர், ஊருக்கு கஞ்சா எனவும், வீடு வீட்டுக்கும் கஞ்சா வந்து விடுமோ என மக்கள் அஞ்சுவதாகவும், எங்கு பார்த்தாலும் வெட்டு குத்து, கொலை தான் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக இருப்பதாக கூறினார். 
 
வடநாட்டில் பாஜகவிற்கு இளைஞர் ஒருவர் 8முறை வாக்களித்தது பற்றிய கேள்விக்கு, அதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள் எனவும், இங்கும் திமுகவினர் கள்ள ஒட்டு போட்டுகொண்டு இருக்கிறார்கள் என கூறினார்.