சூடான சுவையான இளநீர் ரசம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்..!
பல காலங்களாகவே தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் இளநீருக்கு முக்கிய பங்குண்டு. வெயில் காலங்களில் தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் இளநீர் கிடைப்பதை பார்க்க முடியும். ஏனெனில் இளநீர் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்க கூடியது.
எனவே இளநீரை பயன்படுத்தி செய்யும் ரசமும் கூட உடலுக்கு குளிர்ச்சி தன்மையை கொடுப்பதாக உள்ளது. இதை எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
• இளநீர் – 1
• தக்காளி – 1
• பச்சை மிளகாய் – 2
• மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
• உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
1. இளநீரை உடைத்து அதன் தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
2. பிறகு தக்காளி, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி அதையும் தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
4. அதில் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்க்கவும்.
5. பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு அதில் உப்பு, மஞ்சள்தூளை சேர்க்கவும்
6. தக்காளி நன்றாக வதங்கி வந்த பிறகு இந்த கலவையில் தயாராக வைத்துள்ள இளநீர் தண்ணீரை சேர்க்கவும்.
7. பிறகு முதல் கொதி வந்ததுமே அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லியை தூவி ரசத்தை இறக்கவும்.
இதே முறையில் இளநீருக்கு பதிலாக மோரை பயன்படுத்தியும் ரசம் செய்யலாம். பெரும்பாலும் கோடை காலங்களில் செய்யும் உணவாக இளநீர் ரசம் உள்ளது.