1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Raj Kumar
Last Modified: செவ்வாய், 21 மே 2024 (13:33 IST)

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

Saamai Halwa
உடலுக்கு நன்மை பயக்கும் தானியங்களில் சாமையும் முக்கியமான தானியமாகும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அதை யாரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. எனவே சாமையை கொண்டு சுவையான பதார்த்தங்களை செய்வதன் மூலம் அதை எளிமையாக உணவில் சேர்த்துக்கொள்ள முடியும்.



அந்த வகையில் சாமை அல்வாஎப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

•           சாமை -  1 கப்
•           தண்ணீர் -  2 கப்
•           நெய் – ½ கப்
•           வெல்லம் – ½ கப்
•           ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
•           முந்திரி, உலர் திராட்சை -  தேவைக்கேற்ப

செய்முறை:

1.         முதலில் சாமையை சுத்தமாக கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். ஏனெனில் ஊறிய சாமையை வேக வைக்க எளிமையாக இருக்கும்.
2.         பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
3.         சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்தே வெந்துவிட்டதா என அறிய முடியும். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து அதை எடுத்து வைக்கவும்.
4.         அதன் பிறகு ஒரு வாணலியில் நெய் விட்டு உருகும் வரை காத்திருக்கவும்.
5.         உருகிய நெய்யில் வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
6.         நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் உருகி சாமையோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.
7.         அதன் பிறகு அதில் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சாமை அல்வா தயார்.

வழக்கமாக இருக்கும் கோதுமை அல்வா போல இல்லாமல் சாமை அல்வா பார்ப்பதற்கு கேக் போல் இருக்கும். ஆனால் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இது இருக்கிறது. மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க உகந்த பலகாரமாக சாமை அல்வா இருக்கிறது.