ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:51 IST)

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு..!

bus
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் சனி ஞாயிறு வார விடுமுறைyஐ அடுத்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ஆகஸ்ட் 15ம் தேதியன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 14ம் தேதி அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14ம் தேதி அன்று 470 பேருந்துகளும், 16ம் தேதி மற்றும் 17ம் தேதி 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14ம் தேதி புதன்கிழமை அன்று 70 பேருந்துகளும் 16ம் தேதி வெள்ளிக் கிழமை மற்றும் 17ம் தேதி சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 14, 16 மற்றும் 17ம் தேதி ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
 
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran